பல்வேறு மாநிலங்களில் டிஜிட்டல் பயிர்க் கணக்கெடுப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில் செயலியில் விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் டிஜிட்டல் பயிர்க் கணக்கெடுப்பைத் தொடங்கும் விதமாக அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு என்றால் என்ன?
தற்போது வரை வேளாண் அலுவலர்கள் நேரடியாக களத்திற்கு சென்று ஆவணங்களில் நில அளவீடுகளை குறிப்பிட்டு வந்தனர். இத்திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து உருவாக்கிய மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் மூலம் வேளாண் துறையின் களப்பணியாளர்கள் விளைநிலங்களுக்குச் சென்று நிலத்தின் சரியான தீர்க்கரேகை மற்றும் அட்சரேகையுடன் படம் எடுப்பார்கள். அவர்கள் விவசாயியின் விவரங்களையும், பயிரிடப்பட்ட பயிர் வகையையும், செயலியில் சேர்ப்பார்கள். இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இது குறிப்பாக உதவியாக இருக்கும்.
ஒடிசா மாநிலத்தில் முதல் கட்டமாக நுவாபாடா, நாயகர், தியோகர் மற்றும் பத்ரக் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பயிர் கணக்கெடுப்பு ஒடிசாவுக்கு புதிதல்ல என்றாலும், இது எங்கள் கள ஊழியர்களால் கைமுறையாக நடத்தப்பட்டது. அது பெரும்பாலும் துல்லியமாக இல்லை மற்றும் எங்களுக்கு ஒரு தோராயமான எண்ணிக்கையை அளித்தது. ஆனால், துல்லியமான புள்ளிவிவரங்களைப் பெறுவதற்காக அதை டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளோம், ”என்று ஒடிசா மாநில வேளாண் துறை இயக்குனர் பிரேம் சந்திர சவுத்ரி கூறியுள்ளார்.
டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு திட்த்தின் கீழ் சேவைகளைப் பெற விரும்பும் தனிநபர், ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணினை இணைத்தவர்களுக்கு மட்டுமே பேரிடர் காலங்களில் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பின் மூலம் இழப்பீடு வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாத விவசாயிகள், நில உரிமையாளர்கள் ஆதார் அப்ளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆதாரினை பெறும் வரை தங்களது அடையாள ஆவணமாக பிறப்புச்சான்றிதழ், ரேஷன் கார்டு, ஓய்வூதிய அட்டை, ஏதேனும் அரசாங்க அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றினை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க: