இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகமானது நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. நீர் நிலைகளின் வகை, ஆக்கிரமிப்புகளின் நிலை, பயன்பாடு, சேமிப்புத் திறன் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் வழிகாட்டுதல்படி, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, குளங்கள், ஏரிகள் என இயற்கையாலும் மனிதர்களாலும் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் நீர் ஆதாரங்களின் விரிவான பட்டியலை வழங்குவதோடு, நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பு குறித்தத் தரவுகளையும் சேகரித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் விரிவான தரவுகளை அறிய, 6-வது சொட்டு நீர்ப்பாசன கணக்கெடுப்புடன் இணைந்து, இந்த "நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு" தொடங்கப்பட்டது. நீர்நிலைகளின் வகை, ஆக்கிரமிப்புகளின் நிலை, பயன்பாடு, சேமிப்புத் திறன் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாட்டில் இல்லாத அனைத்து நீர்நிலைகளையும் உள்ளடக்கியது. பாசனம், தொழில், மீன் வளர்ப்பு, வீட்டுப் பயன்பாடு, பொழுதுபோக்கு, நிலத்தடி நீர் போன்ற நீர்நிலைகளின் அனைத்து வகையான பயன்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நீர்நிலைகள் கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- நாட்டில் 24,24,540 நீர்நிலைகள் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றில் 97.1% (23,55,055) கிராமப்புறங்களிலும், 2.9% (69,485) நகர்ப்புறங்களிலும் உள்ளன.
- நீர் நிலைகளின் எண்ணிக்கையில் முதல் 05 மாநிலங்கள் முறையே மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் அசாம் ஆகும். நாட்டின் மொத்த நீர்நிலைகளில் 63% இந்த மாநிலங்களில் உள்ளது.
- நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கையில் முதல் 05 மாநிலங்கள் முறையே மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகும். கிராமப்புறங்களில், முதல் 05 மாநிலங்கள் முறையே மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் அசாம் ஆகும்.
- 59.5% நீர்நிலைகள் குளங்கள், அதைத் தொடர்ந்து தொட்டிகள் (15.7%), நீர்த்தேக்கங்கள் (12.1%), நீர் பாதுகாப்பு திட்டங்கள்/ பெர்கோலேஷன் தொட்டிகள் / தடுப்பணைகள் (9.3%), ஏரிகள் (0.9%) மற்றும் பிற (2.5%).
- 55.2% நீர்நிலைகள் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை, 44.8% நீர்நிலைகள் பொது உரிமையில் உள்ளன.
- பொதுச் சொந்தமான அனைத்து நீர்நிலைகளிலும், அதிகபட்ச நீர்நிலைகள் பஞ்சாயத்துகளுக்குச் சொந்தமானவை, அதைத் தொடர்ந்து மாநில நீர்ப்பாசனம்/மாநில WRD சொந்தமானவை.
- மேற்கு வங்காளம், அசாம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகியவை தனியாருக்குச் சொந்தமான நீர்நிலைகளில் முன்னணியில் உள்ள முதல் 05 மாநிலங்கள் ஆகும்.
- மீன் வளர்ப்பில் நீர்நிலைகளை அதிகம் பயன்படுத்தும் முதல் 05 மாநிலங்கள் முறையே, மேற்கு வங்காளம், அசாம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம்;
- பாசனத்தில் நீர்நிலைகளை அதிகம் பயன்படுத்தும் முதல் 05 மாநிலங்கள் முறையே ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகும்.
78% நீர்நிலைகள் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள், 22% இயற்கை நீர்நிலைகள். கணக்கிடப்பட்ட அனைத்து நீர்நிலைகளிலும் 1.6% (38,496) நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 95.4% கிராமப்புறங்களிலும், மீதமுள்ள 4.6% நகர்ப்புறங்களிலும் உள்ளன என வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
photo curtesy- reuters/Danish siddiqui
மேலும் காண்க: