கோவையில், தென்னை மற்றும் நெல் பயிரிடும் பட்டியல் இன வகுப்பு வேளாண் பெருமக்களுக்கு ஒருங்கிணைந்தக் களை மேலாண்மைப் பற்றிய நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) உழவியல் துறையில் செயல்பட்டுவரும் அகில இந்திய களை மேலாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் தென்னை மற்றும் நெல் பயிரிடும் பட்டியிலன வகுப்பு வேளாண் பெருமக்களுக்கு ஒருங்கிணைந்தக் களை மேலாண்மை பற்றிய கூட்டம் ஆனைமலை தாலுக்காவில் உள்ள இரமணமுதலிபுதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது.
இதில் களை மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கு தேவையான இடுபொருள்களை இலவசமாகக் கொடுக்கவும் தேவையான நிதி உதவிகள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்திடமிருந்து பெறப்பட்டது.
இப்பயிற்சிக்கு தலைமையேற்ற உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் இ.ரா. சின்னமுத்து, களைக்கொல்லிகள் பற்றித் தெளிவாக எடுத்துரைத்தார்.
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் வா. கஸ்தூரிவாசுவும் கலந்து கொண்டு கொரோனாத் தொற்று காலத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் பெருமக்களின் பங்களிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை மேற்கோள்காட்டி சிறப்புரையாற்றினார்.
இதேபோல் களை மேலாண்மைத் திட்டத்தின் முதன்மை விஞ்ஞானியும், இணைப் பேராசிரியருமான முனைவர் . ப.முரளி அர்த்தனாரி, களைக்கொல்லிகளை எந்தெந்த பயிருக்கு, எந்த அளவுப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விபரங்களை வேளாண் பெருமக்களுக்கு செயல்முறையாக எடுத்துரைத்தார்.
இப்பயிற்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ம. தனபாக்கியம், கோவை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர். வி. மகாலிங்கம், ஆகியோர் பங்குபெற்று சிறப்புரையாற்றினர்.
மேலும் படிக்க...
தமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை!
100% வரை மானியம் கிடைக்கும் சொட்டு நீா் பாசன திட்டம் - விவசாயிகள் பயன்பெறலாம்!!