தற்போது நம் நாட்டில் ஒரு பக்கம் கடுமையான வெப்ப அலை அடிக்கிறது; அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் பலத்த மழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற மாறுபட்ட பருவநிலை மாற்றங்கள் மேலும் மோசமாகும் என, சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டில்லி உட்பட வட மாநிலங்களில் வெயில் மிகவும் தீவிரமாக உள்ளது. இயல்பு வெப்பநிலையை விட, 4.5 முதல் 6.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகமாக இருந்தால், அது வெப்ப அலை என்று அழைக்கப்படுகிறது.இதைவிட அதிகமானால், தீவிர வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. தலைநகர் டில்லியில் இயல்பான வெப்பநிலை 40.2 டிகிரி செல்ஷியஸ் ஆகும்.ஆனால், நேற்று முன்தினம் அங்கு, 49 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
வெப்பநிலை (Temperature)
டில்லியை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பெரும்பாலான வட மாநிலங்களில் தற்போது வெப்ப அலை அடிக்கிறது. அதே நேரத்தில் தெற்கே உள்ள கேரளா, லட்சத் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து, சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் வெப்ப அலை நிலவுகிறது. அதே நேரத்தில் சில மாநிலங்களில் பலத்த மழை பெய்கிறது.
இது, பருவநிலை மாறுபாடு பிரச்னையின் தாக்கமே. பருவநிலை மாறுபாட்டால் ஏற்பட்டுள்ள இந்த நிலை தொடரும் அல்லது மேலும் மோசமடையும். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், அது போதாது. பருவநிலை மாறுபாடு பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். உடல் நிலை பாதிப்பு, பொருளாதார பாதிப்பு, விவசாய உற்பத்தி பாதிப்பு என, பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க