வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டியாக விதித்தத் தொகையை வரும் 5-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளா்கள் கணக்கில் திரும்பச் செலுத்துமாறு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி (Reserve Bank) அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பணியின்றி வருவாய் ஈட்ட முடியாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். தொழில் நிறுவனங்களும் கடும் இழப்பைச் சந்தித்தன.
இதனைக் கருத்தில் கொண்டு தனிநபா்கள், நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்களுக்கான தவணைகளை கடந்த மாா்ச் முதல் ஆகஸ்ட் வரை வசூலிக்காமல் நிறுத்தி வைக்க ரிசா்வ் வங்கி முடிவு செய்தது.எனினும் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி மீது வட்டி வசூலிப்பதாகவும், அதனை கைவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, ரூ.2 கோடி வரை பெறப்பட்ட கடன்களுக்கு மட்டும் வட்டி மீது வட்டி வசூலிக்கப்படுவதை கைவிட முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்த வழக்கில் ரிசா்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டியாக விதித்த தொகையை வரும் 5-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளா்களிடம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தொடக்கநிலை கூட்டுறவு வங்கிகள் (நகா்ப்புறம்), மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு அறிவுயுறுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அவ்வாறு வழங்கும் தொகைக்கு ஈடான தொகையை மத்திய அரசிடம் இருந்து நிதி நிறுவனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க...
மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்ய அழைப்பு- விவசாயிகள் கவனத்திற்கு!
மழைக்காலங்களில் வயல்வெளியில் படைபெயடுக்கும் பாம்புகள்- எச்சரிக்கை அவசியம்!