சென்னையிலுள்ள பெசண்ட் நகர் கடற்கரையில் சர்வதேச வன நாள் விழாவினை முன்னிட்டு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து ஆமை குஞ்சுகளை கடலில் விட்டார்.
மார்ச் 21 ஆம் தேதியானது உலகம் முழுவதும் சர்வதேச வன நாள் விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையிலுள்ள பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையில் நேற்று (24.03.2023) வனத்துறை சார்பாக நடைபெற்ற சர்வதேச வன நாள் விழாவில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பங்கேற்றார். மேலும் வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கடற்கரை வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியிலும் பங்கேற்று சிறப்பித்தார். இதன்பின் வனத்துறை மூலம் வளர்க்கப்பட்ட ஆமை குஞ்சுகளை கடலில் விட்டார்.
சர்வதேச வனநாள் பின்னணி:
நவம்பர் 28, 2012 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் தீர்மானத்தின் மூலம் சர்வதேச காடுகளின் நாள் மார்ச் 21 ஆம் தேதி நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு நிகழ்வுகள் அனைத்து வகையான காடுகளின் முக்கியத்துவத்தையும், காடுகளுக்கு வெளியே உள்ள மரங்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. சர்வதேச வன நாள் 2013 மார்ச் 21 அன்று முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது. நடப்பாண்டிற்கான(2023) சர்வதேச வனநாளின் கருப்பொருளாக ”காடுகள் மற்றும் ஆரோக்கியம்” என்பவை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் உரையாற்றிய விவரங்கள் பின்வருமாறு-
சர்வதேச வன நாளை அனுசரிக்கும் விதமாக வனத்துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாணவ, மாணவியர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பங்கேற்கும் தூய்மைப் பணியும், பேரணியும் பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையில் நடத்தப்படுகிறது. வனம் மற்றும் கடலில் வாழும் விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வனத்துறையால் வளர்க்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இதுபோல் பொதுமக்களும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட சர்வதேச வனநாள் விழாவில் வனத்துறையுடன் இணைந்து பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா ஸாஹு இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்/தலைமை செயல் அலுவலர் (கேம்பா) சுதாநாஷீ குப்தா, இ.வ.ப., முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (தலைமை வன உயிரின காப்பாளர்) சீனிவாஸ் ரா ரெட்டி இ.வ.ப., சென்னை மண்டல வனப் பாதுகாவலர் கே.கீதாஞ்சலி இ.வ.ப, சென்னை மாவட்ட வன அலுவலர் எஸ்.சண்முகம் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க: