1. செய்திகள்

தனுஷின் கேப்டன் மில்லர் படக்குழுவால் விவசாயிகள், விலங்குகளுக்கு சிக்கல்- புகார் குறித்து விசாரிக்க உத்தரவு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Captain Miller has caused damage to the Chenkulam canal bank

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு குழுவால் விவசாயிகள், விலங்குகள் பாதிப்படைந்துள்ளதாக கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலர் புகார் அளித்துள்ளார். புகாரினை தொடர்ந்து படக்குழுவிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதிகப் பொருட்செலவில் இப்படத்தினை தயாரிப்பாளர் தியாகராஜனின் தயாரிப்பு நிறுவனமான 'சத்யா ஜோதி பிலிம்ஸ்' தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது 1930-1940 ஆம் ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையம்சம் கொண்டதாக சமீபத்தில் வெளியான போஸ்டர், மற்றும் டீசர் மூலம் தெரிய வந்தது. இந்நிலையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் படப்பிடிப்பு நடைப்பெற்றதாகவும் மற்றும் செங்குளம் கால்வாயின் குறுக்கே அனுமதியின்றி கரையை சேதப்படுத்தி மரப்பாலம் அமைத்துள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கேப்டன் மில்லர் படப்பிடிப்பு குழுவின் செயல்களால் ஜனவரி மாதம் முதல் விவசாய நிலங்களுக்குள் விலங்குகள் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ம.தி.மு.க., கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலர் ராம.உதயசூரியன் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறைக்கு மனு அளித்துள்ளார்.

மத்தலம்பாறை கிராமத்திற்கு அருகிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (KMTR-Kalakkad Mundanthurai Tiger Reserve's buffer zone) இடையகப் பகுதியில் படப்பிடிப்புக் குழுவினர் முகாமிட்டுள்ளதாகவும், படப்பிடிப்பின் போது தீயை எரிப்பதைத் தவிர உயர் பீம் விளக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளால், அப்பகுதியில் உள்ள வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன, என புகார் மனு அளித்த கவுன்சிலர் குறிப்பிட்டார்.

செங்குளம் கால்வாயில் தடுப்பு அணை கட்டுவதற்காக ஆய்வு செய்தபோது, படக்குழுவினர் கரையை சேதப்படுத்தி, கால்வாயின் ஒரு பகுதியை மண்ணால் நிரப்பியது தெரிய வந்துள்ளது. இந்த கால்வாய்க்கு பழைய குற்றாலம் அருவியில் இருந்து தண்ணீர் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினரின் இந்த அத்துமீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனவரி கடைசி வாரத்தில் இருந்து KMTR இன் இடையகப் பகுதியில் படக்குழு முகாமிட்டுள்ளதாகவும், திரைப்படத்திற்காக தனியார் நிலத்தில் மெகா ஃபிலிம் செட் ஒன்றை அமைத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி எஸ்.முருகேசன் கூறுகையில், சமீபத்தில் படத்தொகுப்பில் இருந்து வந்த சத்தத்தால் யானைகள் பீதியடைந்து அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. எனது நிலத்தில் இருந்த பல தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியது.

பொதுவாக நம் வயல்களுக்குள் புகுந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்திவிட்டு மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பும். இருப்பினும், படப்பிடிப்பு பகுதியானது வனப்பகுதிக்கு திரும்பும் வழியில் நடைப்பெற்று வருகிறது. இதனால் யானை காட்டுக்குள் திரும்ப இயலாமல் கடந்த சில நாட்களாக எங்கள் வயல்களில் ஒற்றை யானை சுற்றித் திரிகிறது" என்று விவசாயி வேதனை தெரிவித்தார்.

KMTR-யின் துணை இயக்குநரும் வனவிலங்கு காப்பாளருமான எஸ்.செண்பகப்ரியா, பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் படப்பிடிப்பை மேற்கொள்வது பற்றி தனக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்று கூறினார். ரிசர்வ் வனப்பகுதிக்கு வெளியே படப்பிடிப்பு நடந்து வருகிறது. அப்படியிருந்தும், கேஎம்டிஆர் இடையகப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த தலைமை வனவிலங்கு காப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். மத்தளம்பாறையில் படப்பிடிப்பு நடத்த வனத்துறை யாரையும் அனுமதிக்கவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்ரமணிய பாண்டியன், மரப்பாலம் கட்டவோ, கால்வாய் கரையில் மாற்றம் செய்யவோ பொதுப்பணித்துறை அனுமதி வழங்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாக அதிகாரி ராஜ்குமார், படப்பிடிப்புக்கு முன்னதாக அமைச்சர் எம்.மதிவேந்தன் மற்றும் ஐபிஎஸ் அதிகாரியின் உதவியுடன் வனத்துறையிடம் அனுமதி பெற்றதாக முன்னணி பத்திரிகை நிருபரிடம் கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பிற்குப் பிறகு மரப்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளோம். தனியார் நிலத்தில் கட்டப்பட்டுள்ள இப்பட செட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் கேப்டன் மில்லர் படக்குழு துப்பாக்கிச் சூடு தொடர்பான படப்பிடிப்பு காட்சிகளை மேற்கொள்ள மார்ச் 9 ஆம் தேதி வனத்துறை முதன்மை தலைமைப் பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளருமான ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி அனுமதி அளித்துள்ள கடித நகலை நிர்வாக அதிகாரி பகிர்ந்துள்ளார்.

bridge build by captain miller movie unit

இதற்கிடையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவிக்கையில், இப்பிரச்சினை குறித்து வனத்துறை முதன்மை தலைமைப் பாதுகாவலரை விசாரிக்க அறிவுறுத்தியுள்ளேன் என பதிலளித்துள்ளார்.

மேலும் காண்க:

நம்ம குடிக்கிறது பாதுகாப்பான குடிநீர் தான? அதிர்ச்சி அளித்த ஐ.நா.வின் ரிப்போர்ட்

English Summary: Captain Miller has caused damage to the Chenkulam canal bank Published on: 22 March 2023, 05:49 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.