செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.
மதுராந்தகம் வட்டாரத்தைச் சார்ந்த புக்கத்துறை கிராமத்திலுள்ள கோடித்தண்டலம் கிராமத்தில் 2021-22 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தரிசு நில மேம்பாட்டுத் தொகுப்பினை நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்கள். இந்த தொகுப்பில் மா, கொய்யா மற்றும் சப்போட்டா ஆகிய 1450 பழமரக்கன்றுகள் சாகுபடி செய்ததையும், இரண்டு எண்கள் சூரியசக்தி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்கள். அப்போது விவசாயிகள் தாங்கள் 40 ஆண்டு காலமாக எவ்வித பயிர் சாகுபடியும் செய்யவில்லை என்றும் தற்போது நல்ல நீர்வசதி உள்ளதால் பழமரக்கன்றுகளை நடவு செய்து பாதுகாத்து வருவதாக தெரிவித்தார்கள். மேலும் தலைமைச் செயலாளர், துறை அலுவலர்களிடம் பழமரக்கன்றுகளை பராமரித்தல் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்கள்,
அடுத்தாக, பள்ளியகரம் கிராமத்தில் துரைராஜ் என்கிற விவசாயி நிலத்தில் முதல் முறையாக 3.5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள GJG 31 நிலக்கடலை விதைப்பண்ணையை ஆய்வு செய்தார்கள். நிலக்கடலை செடிகளை நிலத்திலிருந்து எடுத்து அதில் அதிக அளவில் திரட்சியான காய்கள் இருந்ததைக் கண்டு, மிகவும் நேர்த்தியாக சாகுபடி செய்துவருவதாக தெரிவித்து, அந்த விவசாயியை தலைமைச் செயலாளர் பாராட்டினார்கள்.
அடுத்ததாக, அச்சரப்பாக்கம் வட்டாரம், துறையூர் கிராமத்தில் லட்சுமிபதி அவர்களின் நிலத்தில் சொட்டு நீர் பாசனத்துடன் சாகுபடி செய்யப்பட்டுள்ள CoV 09356 இரக கரும்புப் பயிரினை ஆய்வு செய்தார்கள். சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் சொட்டு நீர்பாசனம் அமைக்கப்பட்டதாக தலைமைச் செயலாளரிடம் விவசாயி தெரிவித்தார். சொட்டு நீர்பாசனக் கருவிகளை நன்கு பராமரித்து, பயன்பெறுமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொடர் சங்கிலி மேலாண்மை திட்டத்தில் ரூ 3.90 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்கள். அச்சமயத்தில் சூரிய மின் வசதி அமைத்துப் பயன்படுத்துவதால் மின்கட்டணம் வெகுவாக குறைந்திட வாய்ப்புள்ளது என ஆலோசனை வழங்கினார்கள்.
பிறகு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளான டிராக்டர், பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் ஆகியவற்றை தலைமைச் செயலாளர் வழங்கினார்கள். அப்போது பவர் டில்லர் பெற்ற பெண் விவசாயி கன்னியம்மாள் என்பவர் தனது கணவர் இல்லாததால் தானும், தனது மகளும் நெல் சாகுபடி செய்து வருதாக தெரிவித்தார். தற்போது தனது மகள் நெல் அறுவடை செய்து வருவதால் இன்று வரவில்லை எனவும் தெரிவித்தார், மானிய விலையில் பெற்ற பவர் டில்லரை தனது மகள் இயக்குவார் எனவும் தெரிவித்தார். இதனைக் கேட்ட தலைமைச் செயலாளர் அவர்கள் இரண்டு பெண்கள் மன உறுதியுடன் விவசாயம் செய்து வருவதை நெகிழ்ந்து, பாராட்டினார்கள்.
இறுதியாக, அச்சரப்பாக்கம் பள்ளிப்பேட்டை கிராமத்தில் அரசு மானிய உதவியுடன் பால் காளாண் உற்பத்தி செய்துவரும் தன்ராஜ் அவர்களின் காளாண் உற்பத்தி மையத்தினை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்கள். அப்போது விவசாயிடம், அரசு பங்களிப்பு மானியம் குறித்தும், காளாண்கள் எவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றது என்பதையும் தலைமைச் செயலாளர் அவர்கள் கேட்டறிந்தார்கள். உற்பத்தி மையம் சென்னைக்கு அருகாமையில் அமைந்திருப்பதால் காளாண்களை நல்ல விலைக்கு விற்பனை செய்திட வாய்ப்புள்ளதால், இதனை நன்கு பயன்படுத்தி முன்னேறிட வேண்டும் எனத் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., தோட்டக்கலை இயக்குநர் பிருந்தா தேவி, இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் ஆகியோரும் உடனிருந்தார்கள்.
மேலும் காண்க:
இந்த 6 பூச்சி மருந்தை பயன்படுத்தாதீங்க- விவசாயிகளுக்கு ஆட்சியர் கோரிக்கை
சூடான காஃபியுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அருந்தலாமா? கூடாதா?