நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 August, 2022 8:06 PM IST
Isha Agriculture Seminar

“இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் காக்க இயற்கை விவசாயமே தீர்வாக இருக்கிறது” என ஈஷா விவசாய கருத்தரங்கில் பிரபல வேளாண் வல்லுநர் திரு. பாமயன் கூறினார். திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் நேற்று (ஆகஸ்ட் 28) மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இயற்கை விவசாயம் (Organic Farming)

இந்த கருத்தரங்கில் திரு. பாமயன் அவர்கள், இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், விவசாயம் செய்வதற்கு மண்வளம் மிகவும் அவசியம். உலகளவில் மண்ணை ஒரு ஜடப்பொருளாக பார்க்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் உயிருள்ள பொருளாக பார்க்கிறோம். அதில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளால் தான் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால், அந்த நுண்ணுயிரிகள் அழிந்து மண்வளம் பாழாகிறது. மேலும், வளம் இழந்த மண்ணில் விளையும் விளைபொருட்களில் எந்த சத்துகளும் இருக்காது. இதனால், ஏராளமான நோய்களும் வருகிறது. இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் காப்பதற்கு இயற்கை விவசாயமே தீர்வாக அமையும்.

குறிப்பாக, பாரம்பரிய நெல் ரகங்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அவற்றை உட்கொள்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமின்றி, நெல் ரகங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு அதே சத்துடன் எடுத்துச் செல்லும் திறன் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே, அவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்றார்.

பூச்சி மேலாண்மை (Pest Management)

பூச்சி மேலாண்மை குறித்து பேசிய பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம், நெல் விவசாயம் மட்டுமின்றி அனைத்து வகை விவசாயத்திலும் பூச்சி மேலாண்மை என்பது மிகவும் அவசியம். பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் என இரு வகைகள் உள்ளன. பயிர்களை சேதப்படுத்தி, அதை உணவாக உட்கொள்ளும் பூச்சிகளை தீமை செய்யும் பூச்சிகள் எனவும், அந்த பூச்சிகளையே உணவாக உட்கொள்ளும் பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகள் எனவும் அழைக்கிறோம்.

சில குறிப்பிட்ட பயிர்கள் மற்றும் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் நாம் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகம் ஈர்க்க முடியும். அந்தப் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளை உட்கொண்டு, பயிர்களை பாதுகாக்கும். இதனால், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் நாம் பயிர்களை சாகுபடி செய்ய முடியும். இதனால், உற்பத்தி செலவு குறைவதோடு மட்டுமின்றி, நெல் மற்றும் காய்கறிகளில் விஷத் தன்மையின்றி சத்தாக விளைவிக்க முடியும். இதை விவசாயிகள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ள ஈஷா விவசாய இயக்கம் சார்பில், "பூச்சிகளை கவனிங்க" என்ற பெயரில் நடத்தப்படும் இரண்டு நாள் களப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்றார்.

ஒற்றை நாற்று நடவு முறை

கால் கிலோ விதை நெல்லில், 4 டன் மகசூல் எடுத்து சாதனை படைத்த முன்னோடி விவசாயி திரு. ஆலங்குடி பெருமாள் அவர்கள் ஒற்றை நாற்று நடவு முறையின் நன்மைகள் குறித்து விரிவாக பேசினார். அவர் கூறுகையில், பொதுவாக பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 30 கிலோ விதை நெல்லை பயன்படுத்துகின்றனர். ஆனால், நான் கடைபிடிக்கும் ஒற்றை நாற்று நடவு முறையில் மண்ணின் தன்மைக்கேற்ப கால் கிலோவில் இருந்து 5 கிலோ வரை விதை நெல்லே போதுமானது. இதனால், விதை நெல்லின் செலவு குறைகிறது. மேலும், இடைவெளி விட்டு நடுவதால் நெல் மணிகள் தூர் விட்டு மகசூல் அதிகரிக்கும்.

வழக்கமான முறையில் ஏக்கருக்கு 2 டன் மகசூல் எடுத்தால், என்னுடைய முறையில் 3 முதல் 4 டன் மகசூல் எடுக்க முடியும். மேலும் எலித்தொல்லை இருக்காது. இயற்கை சீற்றங்களின் போது, காற்றில் நெல் கதிர்கள் சாயாமல் இருக்கும். களை செலவும், ஆட்கள் தேவையும் குறைவாக இருக்கும். இதனால், செலவை குறைத்து, வரவை அதிகரிக்க முடியும். கிட்டத்தட்ட ஏக்கருக்கு 3 மடங்கு கூடுதல் இலாபம் பார்க்க முடியும் என்று கூறினார்.

பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் சந்தை வாய்ப்பு குறித்து திரு. கோ. சித்தர் அவர்களும், பாரம்பரிய நெல்லில் மறைந்திருக்கும் அறிவியல் உண்மைகள் குறித்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் திரு. மணிமாறன் அவர்களும் பேசினார்கள். நெல் சாகுபடி செய்வதில் பின்பற்ற வேண்டிய நுட்பங்கள் குறித்து திரு. சரவணன் அவர்களும், வேளாண் காடு வளர்ப்பு முறை குறித்து திரு. தமிழ்மாறன் அவர்களும் உரை ஆற்றினர். நெல்லுக்கு உகந்த இடுபொருட்கள் மற்றும் கால்நடை இல்லாத இயற்கை விவசாயம் குறித்து திரு. பிரபாகரன் பேசினார்.

முன்னதாக, கருத்தரங்கின் தொடக்க விழாவில், எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியின் நிர்வாக பொது மேலாளர் திருமதி. தேவி, கல்லூரியின் இயக்குநர் திரு. மால் முருகன், தமிழ்நாடு கள் இறக்க கள ஒருங்கிணைப்பாளர் திரு. நல்லசாமி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே உரம்: புதிய உர மாற்றங்கள் விரைவில் வரப் போகுது!

வீடு தேடி வரும் விதை நெல்: விவசாயத்தை மீட்டெடுக்கும் பட்டதாரி!

English Summary: Isha Agriculture Seminar: Organic farming is the solution to save nature and our health!
Published on: 29 August 2022, 08:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now