மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பல்வேறு மானியங்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அந்த மானியங்களைப் பெறுவதற்கு சில நெறிமுறைகளை அரசு வெளியிட்டு வருகிறது. அந்த நிலையில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றைக் குறித்துதான் இப்பதிவு விளக்குகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்களையும் சேவைகளையும் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதுவரை ஆதாரைப் பயன்படுத்தித் திட்டங்களைப் புதுப்பித்த நிலையில் இனி ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளைக் கடுமையாக்கும் வகையில் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டது.
அந்த சுற்றறிக்கையின்படி, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் மானியங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் எனவும், அதார் வழங்கப்படாத சூழலில், நிரந்தர ஆதார் அட்டை பெரும்வரை ஆதார் பதிவு செய்த எண்ணைப் பயன்படுத்தி சேவைகளைப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டு இல்லை என்றால், அரசின் சார்பாக வழங்கப்படும் மானியங்களையும், பலன்களையும் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தற்போது ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க