நாட்டின், 14வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக நேற்று காலையில் நடந்த தேர்தலின் முடிவு இரவில் வெளியானது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட, மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர், 71, அமோக வெற்றி பெற்றார். வரும், 11ம் தேதி அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். நாட்டின் மிகவும் உயரிய ஜனாதிபதி பதவிக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு வென்றார்.
துணை ஜனாதிபதி (Vice President)
தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10ல் முடிவடைகிறது.இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், புதுடில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி தான், ராஜ்யசபாவின் தலைவராகவும் இருப்பார். துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர், ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்; விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா, 80, நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆல்வா, ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தவர். இந்தத் தேர்தலில், ராஜ்யசபா எம்.பி.,க்கள், நியமன எம்.பி.,க்கள், லோக்சபா எம்.பி.,க்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும். பார்லிமென்டில் மொத்தம், 788 எம்.பி.,க்கள் பதவி உள்ளது. இதில், எட்டு இடங்கள் காலியாக உள்ளன.
நேற்று காலை 10:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் காலையிலேயே வந்து ஓட்டளித்தனர். காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 'வீல் சேரில்' வந்து ஓட்டளித்தார்.காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் மதியத்துக்குப் பிறகு வந்து ஓட்டளித்தனர். மாலை 5:00 மணி வரை நடந்த ஓட்டெடுப்பில், 725 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். மொத்த எம்.பி.,க்களில், 92.94 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளதாக தேர்தல் கமிஷன்தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில், 55 எம்.பி.,க்கள் ஓட்டளிக்கவில்லை. இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தக் கட்சிக்கு, லோக்சபாவில் 23 பேர் உட்பட 39எம்.பி.,க்கள் உள்ளனர்.அதே நேரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த சிசிர் குமார் அதிகாரி, திப்யேந்து அதிகாரி ஆகியோர் நேற்று ஓட்டளித்தனர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த பிரபல நடிகர் சன்னி தியோல், சஞ்சய் தாத்ரே ஆகியோர் ஓட்டளிக்கவில்லை. சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மூத்த தலைவர் சபிகுர் ரஹ்மான் பர்க் ஆகியோரும் ஓட்டளிக்கவில்லை. ஓட்டுப் பதிவு முடிந்த உடன், ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் அமோக வெற்றி பெற்று, வரும் 11ம் தேதி, நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தன்கர் பதவி யேற்க உள்ளார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
ஜக்தீப் தன்கர் (Jagdeep Thankar)
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜக்தீப் தன்கரை, பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நேற்று இரவு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்., மூத்த தலைவர் மார்க ரெட் ஆல்வாவும் ஜக்தீப் தன்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: புதிய ரயில் சேவை தொடக்கம்!
பெண்களுக்காக பிங்க் நிற பேருந்து சேவை: தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்!