
New Train Service
கர்நாடகாவில் இருந்து திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு, இந்த வழித்தடங்களில் கூடுதல் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்த ரயில்வே நிர்வாகம் வாரந்திர சிறப்பு ரயிலை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ரயில் சேவை (New Train Service)
ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில், ஹூப்ளி சந்திப்பு(SSS HUBBALLI JN) முதல் ராமேஸ்வரம்(RAMESWARAM) வரை சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்படும். இந்த சிறப்பு ரயில் (07353) தேவநகரி, தும்கூரு, யஷ்வந்த்பூர் சந்திப்பு, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மன்னார்குடி, ராமநாதபுரம் வழியாக மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07354) ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சந்திப்பு சென்றடையும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் சேவையால் பெங்களூருக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பயனடைவதோடு, ராமேஸ்வரம், திருச்சி பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது IRCTC!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி கன்ஃபார்ம் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்!
Share your comments