பசுமை வனத்தை அதிகரிக்கவும், கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், ஜார்கண்ட் அரசாங்கம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும், மாநிலத்தில் உள்ள பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கும் குறைந்தது இரண்டு பழம் தரும் மரங்களை வழங்க முடிவெடுத்துள்ளது.
காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் அனைத்து அரசுகளும் இயற்கை வளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பழம் தரும் மரக்கன்றுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
"ரேஷன் விநியோகத்தின் போது அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளுக்கும் குறைந்தது இரண்டு பழம் தரும் மரக்கன்றுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது கிராம மக்களின் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் (செடிகள் காய்க்கும் போது அதை விற்க முடியும்) சுற்றுச்சூழலின் தன்மையினை பேணிக்காக்க முடியும்” என்று ஊரக வளர்ச்சித் துறையின் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் போது குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க பதிவுகளின் படி, ஜார்க்கண்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் பொது விநியோக அமைப்பு (PDS) கடைகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
பழம் தரும் மரங்களை விநியோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாநில பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் வனத்துறையுடன் விரைவில் விவாதிக்கப்படும் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் செயலகத்திலுள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை மற்றும் வனத்துறையினருடன் கலந்தாலோசித்து, ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு விரைவில் பழ மரக்கன்றுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பழம் தரும் மரங்கள் பயனாளிகளால் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? இல்லையா? என்பதைப் பார்க்கவும் ஒரு குழு செயல்படும்” என்று கூறினார்.
இத்திட்டம் வெற்றி பெற்றால், மற்ற மாநிலங்களும் இதனை முன்னெடுக்கும் என ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். முன்னதாக நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் பழங்குடியினர் மற்றும் கிராமப்புற மக்கள் வேலைக்காக இடம்பெயர்வது குறித்து முதல்வர் கவலை தெரிவித்ததோடு, இதை சரிபார்க்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
“வேறு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் இடம்பெயர்வது மிகவும் கவலையளிக்கிறது. MGNREGA கீழ் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் ஐந்து திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும், இதன் மூலம் கிராம மக்கள் தங்கள் கிராமங்களில் வேலைவாய்ப்பைப் பெற முடியும்,” என்று முதல்வர் கூறினார்.
மேலும் காண்க:
தந்தையின் மறைவால் விவசாயத்தில் இறங்கிய மகள்- கைக்கொடுத்த மிளகாய்!