விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் ஆடுகள்: அரசு அறிவிப்பு, 4000 இலவசப் பசுக்கள் அறிவிப்பு, தமிழகத்தில் புதிதாக 37,450 வேலைவாய்ப்புகள்: ஒப்பந்தம் செய்தது தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் நேரடி நியமனம்: விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், கோவையில் நடைபெற்ற மாபெரும் விழா: நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக முதல்வர் மு. ஸ்டாலின், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பொருந்துமா எனப் பரிசீலனை, நெல் கொள்முதல் குறித்து விவசாயிகளுடன் இன்று ஆலோசனை முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் ஆடுகள்: அரசு அறிவிப்பு!
90 சதவீத மானியத்துடன் ஆடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதோடு, பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 25 சதவீத மானியத்திலும், பிற விவசாயிகளுக்கு 33 சதவீத மானியத்திலும் 4 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மானிய விலையில் விதைகள் மூலம் விவசாய நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும், நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டின் மாடியில் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு “என் வீடு என் நிலம்” என்ற திட்டத்தின்கீழ் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான தோட்டக்கலை இடுபொருட்கள், விதைகள், நாற்றுகள், தோட்டக்கலை கருவிகள் முதலானவை வழங்கப்படும் என புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 37,450 வேலைவாய்ப்புகள்: ஒப்பந்தம் செய்தது தமிழக அரசு
சென்னையில் நேற்று காலணிகள் மற்றும் தோல் துறை சார்ந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தமிழகத்தில் 37,450 புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் நேரடி நியமனம்: விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின்கீழ் சென்னையினைத் தலைமை இடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிகளுக்கு www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு srb.rcs@gmail.com என்ற மாநில ஆட்சேர்ப்பு நிலையத்தின் மின்னஞ்சல் முகவரியைக் காணலாம். இப்பணிகளுக்குத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கோவையில் நடைபெற்ற மாபெரும் விழா: நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக முதல்வர் மு. ஸ்டாலின்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுமார் 588 கோடி ரூபாய் மதிப்பில்1 லட்சத்து ஏழாயிரத்து அறுபத்து இரண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். மேலும், ரூ. 272 கோடி மதிப்பளவில் 229 முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைத்ததோடு, ரூ. 663 கோடி மதிப்பளவில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வை முன்னிட்டு கோவையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் நாளை காலை திருப்பூரில் சிறு, குறு நிறுவனங்களின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் “நம்ம ஊரு சூப்பரு” நிகழ்ச்சி: தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை ஊராட்சியில் “நம்ம ஊறு சூப்பரு எனும் விழிப்புணர்வு நிகழ்வைத் தொடங்கி வைத்தார் தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்நிகழ்வில் இடம் பசுமை செழிக்க வேண்டும் மரக்கன்றுகளை நட்டார். அதைத் தொடர்ந்து 333.98 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 15 கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட்டன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாகவும், ஒருங்கிணைந்த பள்ளிகள் சீரமைப்பு திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பாகவும் கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பொருந்துமா என பரிசீலனை
தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான உத்தேசிக்கப்பட்டிருந்த மின் கட்டண உயர்வு குறித்துப் பரிசீலனை செய்யப்படும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சாரத் துறையில் ஏற்பட்ட இழப்புகள், வட்டிகள் செலுத்தாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் கட்டண உயர்வு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாகப் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு தாக்குதலுக்கு எளிய தீர்வுகள்!