கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழ் நாடு தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது.
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும். இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்கிறது. இத்தொல்லியல் களம் சுமார் கிமு 6-ஆம் நூற்றாண்டிற்கும், கிமு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியது எனக்கணித்துள்ளனர். இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்புள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி புராதன தளத்தில் பெண் சிலையின் தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி ஆணையரும் தள இயக்குநருமான ஆர். சிவானந்தம் கூறுகையில், மாநில தொல்லியல் துறையின் எட்டாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 105 செ.மீ ஆழத்தில் தலை கண்டெடுக்கப்பட்டது என்றும் இதன் எடை 74 கிராம் என்றும் கூறியுள்ளார். இந்த தலை, டெரகோட்டாவால் ஆனது என்றும், இதனை கையால் வடிவமைத்திருப்பதாகவும் அவர், கூறியுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தலையின் வடிவ அமைப்பானது, இரண்டு அடுக்குகளில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் இடதுபுறத்தை விட உயரமாக இருக்கும். சிகை அலங்காரம், நெற்றிக்கு மேலே, பின்னப்பட்ட முடியின் ஒரு இழை உள்ளது. தலையில் மேலும் மூன்று வரிசை ஜடைகள் காணப்படுகின்றன.
இது மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு தெளிவாகக் காணப்படுகிறது. உயர்த்தப்பட்ட முடியில் பல இடையிடையே கீறல்கள் உள்ளன. நெற்றிக்கு மேலே உள்ள பின்னல் வரை, ஒரு ஜடையைச் சித்தரிக்கும் அலை அலையான கீறல்களால் குறிக்கப்பட்டுள்ளது. அதோடு, தலையில் நேரியல் கீறல்கள் உள்ளன.
சிலையின் நெற்றி தட்டையானது மற்றும் அதன் கண்கள் மெல்லிய கோடுகளால் வெட்டப்பட்டுத் திறந்திருக்கும் நிலையில் காணப்படுகின்றது. புருவங்கள் மற்றும் கண் இமைகளும் காணப்படுகின்றன. இதில் மூக்கு மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கின்றது. ஏனெனில் அது கூர்மையான அழகிய வடிவமாக உள்ளது. சிலையின் உதடுகள் ஆழமாக வெட்டப்பட்டு நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டுள்ளன.
சற்று நீளமான இடது காதில் வட்டமான காதணி உள்ளது. வலது காது உடைந்து சேதமடைந்துள்ளது. தலை பகுதி மட்டும் கிடைத்ததாகவும், மற்ற பகுதிகள் உடைந்து காணவில்லை என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.
மேலும் படிக்க