விவசாயிகளின் நலனுக்காக மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6000 ரூபாய் நிதியுதவி தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதுவரையில் மொத்தம் 13 தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், 14ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit card)
பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு என்ற கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. விவசாயிகளின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யவும், தொடர்ந்து விவசாயத் தொழிலில் ஈடுபடவும் உதவி செய்யும் வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
குறைந்த வட்டி
கிசான் கிரெடிட் கார்டு மூலமாக கடன் வாங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 2 சதவீத வட்டியில் தொடங்கி கடன் கிடைக்கும். சராசரியாக 4 சதவீத வட்டி விகிதத்தில் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையில் கடன் வாங்கலாம். இதில் ரூ.25,000 வரை காப்பீட்டு வசதியும் உள்ளது.
இந்நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வேளாண் கடன் அட்டை மூலம் அளிக்கப்படும் வசதிகள் குறித்து ஹத்ராஸ் மக்களவை உறுப்பினர் ராஜ்வீர் திலேர் ட்விட்டரில் கூறியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், “நமது கடின உழைப்பாளிகளான உணவளிப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை வேளாண் கடன் அட்டை எளிதாக்கியுள்ளதை காணுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதான் அதன் நோக்கம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!