நஷ்டத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலைகளால் ஆதாயம் தேடும் வகையில், எத்தனால் உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. ஆகவே, கடன் பெற விரும்பும் சர்க்கரை ஆலைகள் அக்.15ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென திறக்கப்பட்டுள்ள புதிய விண்ணப்ப தளம் அக்.15 வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன், 2018ல் அறிவிக்கப்பட்ட சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய எத்தனால் உற்பத்தி மையங்களை அமைக்கவும், ஏற்கனவே உள்ள மையங்களை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு மென் கடன்களை அளிக்க ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உபரி கரும்பை சர்க்கரை ஆலைகள் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.
சர்க்கரை ஆலை கடன்
இத்திட்டத்தின் கீழ், வட்டித் தள்ளுபடிச் சலுகையை மத்திய அரசு இரண்டு முறை நீட்டித்தது. இதன் அடிப்படையில் ரூ.22,000 கோடி கடன் வழங்க ஒப்புதல் தரப்பட்டு ரூ.4,600 கோடி வட்டி மானியமாக அளிக்கப்பட்டது. தற்போதுவரை, ரூ.3,500 கோடி மதிப்பிலான 68 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அந்த விண்ணப்பங்களுக்கு வங்கிகளும் கடன்களை ஒதுக்கீடு செய்துள்ளன. இந்த நிலையில் புதிய விண்ணப்பங்களுக்கு தனி இணைய தளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த 68 விண்ணப்பங்களின் அடிப்படையில் எத்தனால் உற்பத்தி 190 கோடி லிட்டர் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
விண்ணப்ப காலம் நீட்டிப்பு
இந்த இணைய தளம் கடந்த செப்.15ம் தேதி துவங்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்கு விண்ணப்பங்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பிக்கும் காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக துவங்கப்பட்ட ஆலைகளும், சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்ட ஆலைகளும் புதிய மென் கடன் கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் தயாரிப்பை அதிகப்படுத்த முயற்சி
நாட்டில் அதிக அளவிலான உபரி சர்க்கரை இருப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சர்க்கரை ஆலைகள் கரும்பில் இருந்து எத்தனால் தயாரிப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது. அதிக சர்க்கரை சத்து கொண்ட பி-மொலாசஸ் ரகத்தில் இருந்து எத்தனால் தயாரிக்கும் படி சர்க்கரை ஆலைகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. சர்க்கரைக்கான ஆதார விலையுடன் ஒப்பிடுகையில் எத்தனாலுக்கு அரசு நிர்ணயிக்கும் ஆதார விலை கூடுதல் ஆதாயம் அளிக்கக்கூடியதாக உள்ளதால், உபரி கரும்பை எத்தனால் தயாரிப்புக்குப் பயன்படுத்துவதன் வாயிலாக சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் வருவாய் உறுதி செய்யப்படும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.
எத்தனால் தயாரிப்பு இலக்கு
தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ், பெட்ரோலுடன் கலக்கும் எத்தனாலின் விகிதத்தை 2022ம் ஆண்டில் 10%, 2030ம் ஆண்டில் 20% உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக எத்தனால் உற்பத்தி அளவை 360 கோடி லிட்டருக்கும் அதிகமாக உயர்த்தவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
மேலும் படிக்க...
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைத்தார் - எடப்பாடி பழனிசாமி!
வாழையின் விலை வழக்கத்தைப் போல நிலையாக இருக்கும்- TNAUவின் கணிப்பு!
மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!