வடமாநில வயல்வெளிகளில் கூட்டம் கூட்டமாக புகுந்து, பயிர்களை அழித்து வந்த பாலைவன வெட்டுக்கிளிகள் (Locust Attack) தற்போது தலைநகர் டெல்லி மற்றும் குருகிராம் நகரங்களில் நுழைந்துவிட்டன.
இந்தியாவின் பல மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
பல மாவட்டங்களில் கொரோனா தனது கோரத் தாண்டவத்தை ஆடி வருகிறது.
இவற்றுக்கு மத்தியில், வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் இன்னொருபுறம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.
பயிர்களை நாசம் செய்த பாலைவன வெட்டுக்கிளிகள்
ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்திர பிரதேச உள்ளிட்ட வட மாநிலங்களில் விளைநிலங்களை நாசம் செய்து வருகின்றன. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த முயற்சியில் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கிராமங்களில் ஆங்காங்கே வயல்வெளிகளில் சுற்றித் திரிந்த வெட்டுக்கிளிகள் தற்போது, நகரங்களுக்குள்ளும் இடம்பெயர்ந்து விட்டன.
தலைநகரில் பாலைவன வெட்டுக்கிளிகள்
தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள குரு கிராமில் சனிக்கிழமை காலை, புகுந்த பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம், வானை மறைக்கும் அளவுக்கு பறந்ததாக குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர்.இதையடுத்து குரு கிராம் மாவட்ட நிர்வாகம் டிராக்டர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொண்டது.
ஜன்னல் கதவுகளை மூடியே வைத்திருக்கும்படியும், வெட்டுக்கிளிகள் கூட்டமாகத் தென்பட்டால் பாத்திரங்களைத் தட்டி விரட்டும் படியும், அப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
குரு கிராமில் வெட்டுக்கிளி தாக்குதலைத் தொடர்ந்து, நிலைமை குறித்து ஆராய அவசரக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்த அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விமானிகளுக்கும் அறிவுறுத்தல்
விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குரு கிராம்-துவாரகா நெடுஞ்சாலை பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக காணப்படுவதால் விமானத்தை தரையிறக்கும் போதும் புறப்படும் போதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு டெல்லி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையம் அனைத்து விமானிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் கிடுகிடுவென அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல், அரசு தவித்து வருகிறது. இத்துடன் தற்போது வெட்டுக்கிளிகள் ஊடுருவியிருப்பது, டெல்லி அரசுக்கு மேலும் தலைவலியை உருவாக்கி உள்ளது.
தலைநகரில் புகுந்துள்ள வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு காரணமாக, அதனை ஒட்டியுள்ள நொய்டா உள்ளிட்ட பிற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், மக்களும் அச்சமடைந்துள்ளனர். தலைநகரைப் பார்வையிட பிற மாநில மக்கள் விரும்புவதைப் போல, வடமாநிலங்களைச் சுற்றிவந்த வெட்டுக்கிளிகளும் தற்போது டெல்லியில் குவிந்துள்ளன.
Elavarase Sivakumar
Krishi Jagran
மேலும் படிக்க...
கால்நடை விவசாயத்தை லாபகரமாக மாற்ற சில டிப்ஸ்!!
கொப்பரைத் தேங்காய்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்!!