பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை ரூ.83.50 குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று (ஜூன்1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமில்லை:
19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான LPG சிலிண்டரின் விலை ரூ.83.50 குறைக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும், உள்நாட்டு எல்பிஜி (வீட்டு உபயோக) சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாக விலை நிலவரம்:
தற்போதைய விலை குறைவின் அடிப்படையில், டெல்லியில் 19 கிலோ எடையுள்ள LPG சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை ₹1,856.50 -ல் இருந்து ₹1,773 ஆக குறைந்துள்ளது. மும்பையில் முந்தைய ₹1,808 ல் இருந்து ₹1,725 ஆகவும் இருக்கும். கொல்கத்தாவில், வணிக ரீதியான LPG சிலிண்டரின் விலை முந்தைய விலையான ₹1,960.50 -லிருந்து ₹1,875.50 ஆகவும் குறைந்துள்ளது. சென்னையினைப் பொறுத்தவரை இதற்கு முந்தைய விலையான ₹2,021-ல் இருந்து ₹1937 ஆக தற்போது விலை குறைந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை யூனிட்டுக்கு ரூ.350.50 ஆகவும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை யூனிட்டுக்கு ரூ.50 ஆகவும் உயர்த்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு LPG சிலிண்டர்களுடன் ஒப்பிடுகையில், வணிக எரிவாயுவின் விலைகள் அதிக அளவில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றன. ஏப்ரல் மாதம், 2024 நிதியாண்டின் முதல் நாளில் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை ₹92 குறைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மே மாதம் ரூ.171.50 குறைக்கப்பட்டது.
மாநிலத்துக்கு மாநிலம் சிலிண்டர் விலை மாறுவது ஏன்?
ஒவ்வொரு குடும்பமும் ஒரு வருடத்தில் தலா 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற இயலும். PAHAL (எல்பிஜியின் நேரடி பயன் பரிமாற்றம்) திட்டத்தின் கீழ், நுகர்வோர் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு விதிக்கும் வரிகள் காரணமாக உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது. எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை நிர்ணயம் அந்நிய செலாவணி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றனர். வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லையென்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Pic Courtesy- Fortune India
மேலும் காண்க: