மகாராஷ்டிராவின் வேளாண்துறை அமைச்சர் அப்துல் சத்தார், மாநில அரசு பள்ளி பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக இனி விவசாயத்தை சேர்க்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் பாடத்திட்டத்தை தயாரிக்க குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் விவசாயம் ஒரு பாடமாக கற்பிக்கப்படும் என அறிவித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, மாநில வேளாண்மை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அடங்கிய குழு பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளது. பாடத்திட்டம் தொடக்கத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையும், பின்னர் 6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 முதல் 10 ஆம் வகுப்பு என மூன்று கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விவசாயத்தை பள்ளிப் பாடமாக சேர்ப்பது தொடர்பான முதற்கட்ட அறிக்கை கல்வித் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில வேளாண்துறை அமைச்சர் அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக பாடத்திட்டத்தை இறுதி செய்வது, விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநில அரசின் இந்த முடிவு மாணவர்களை விவசாயத்தில் ஆர்வமூட்டுவதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழில் குறித்த பொதுவான விழிப்புணர்வையும் அதிகரிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வேளாண்மைப் பாடத்தை பள்ளிப் பாடமாக அறிமுகப்படுத்துவதன் நோக்கம் சிறுவயதிலிருந்தே விவசாயம் குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதாக அப்துல் சத்தார் மேலும் திட்டத்தை பற்றி விளக்கினார்.
தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ் பள்ளிப் பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பல தொழில்சார் பாடங்களில் விவசாயமும் ஒன்றாகும். இந்த பாடத்திற்கான விரிவான பாடத்திட்டத்தை உருவாக்க அரசு இப்போது நிபுணர் குழுக்களை நியமிக்கும்.
மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வர்ஷா கெய்க்வாட் மற்றும் தாட்ஜி பூசே ஆகியோர் முன்னிலையில் பள்ளிக் கல்வி மற்றும் வேளாண் துறைகளின் சார்ப்பில் நடைப்பெற்ற ஒருங்கிணைந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு கடந்த மாதம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதில், ஏக்நாத் ஷிண்டே ஆட்சியின் கீழ் கடந்த ஏழு மாதங்களில் 1,203 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சியின் கீழ் இரண்டரை ஆண்டுகளில் 1,660 விவசாயிகள் இறந்துள்ளனர். 2014 மற்றும் 2019-க்கு இடையில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியின் போது 5,061 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், விவசாயத்தை பள்ளி அளவில் ஒரு பாடத்திட்டமாக சேர்ப்பது எந்தளவிற்கு கைக்கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
pic courtesy- Twit/krishijagran
மேலும் காண்க: