கடலூர் மாவட்டம், தொழுதூரில் 3 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
வேளாண் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை
கிராமப்புற மக்களின் வாழ்விற்கு ஆதாரமாக விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் உற்பத்தி திறனில் உள்ள இடைவெளியை உரிய பண்ணை அணுகுமுறை மூலம் குறைத்து உணவுப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேளாண் விளைபொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், சந்தையிணைப்பை வேறுபடுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து, அவர்களின் வருமானத்தைப் பலமடங்காக உயர்த்திடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
3.78 கோடியில் மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையம்
2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், கடலூர் மாவட்டம், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலமாக கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொழுதூர் கிராமத்தில் 3 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையத்தை (Maize Value Added Center) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து திறந்துவைத்தார்.
இம்மையத்தில் மக்காச்சோளத்திலிருந்து சிறு உருளைகளாக (Pellet) மாட்டு தீவனம் தயாரிக்க தேவையான இயந்திரம், தீவனம் தயாரிக்க தேவையான இடுபொருட்களை கையாளுவதற்கு 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, உலர்களம், எடை மேடை, மின்னணு தராசுகள், மக்காச்சோளத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவு பொருட்களான மாவு வகைகள் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் தானியங்கி நிரப்பும் இயந்திரம் (Automatic Filling Machine) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இம்மையமானது கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து அதிக இலாபம் ஈட்ட வழிவகை செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் எஸ்.ஜே.சிரு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
மேலும் படிக்க
மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!
தீவனப்பயிர் சாகுபடிக்கு மானியம் - வேலூர், திருப்பூர் விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!