குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையினை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையின் 90 ஆண்டுக்கால வரலாற்றில் குறிப்பாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது இது 19-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15- ஆம் தேதி வரை 5,26,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 25.26 டி.எம்.சி தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.
குறுவை பாசனம் நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 93.860 டி.எம்.சி தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30,800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 5.88 டி.எம்.சி தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று ஜீன் மாதம் 12-ம் தேதி காலை வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு ஜூன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து படிப்படியாக வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் வினாடிக்கு 18,000 கனஅடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.30 அடி, நீர் இருப்பு 69.252 டிஎம்சி, நீர்வரத்து வினாடிக்கு 867 கனஅடி, நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறப்பு. இதன் மூலம் தஞ்சை, திருச்சி உட்பட 12 டெல்டா மாவட்டங்களிலுள்ள 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், சேலம் மாநகராட்சி மேயர் ஆர்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ. செந்தில்குமார், டாக்டர் பொன்.கௌதம் சிகாமணி, எஸ்.ஆர். பார்த்திபன், ஏ.கே.பி.சின்ராஜ் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
நடப்பாண்டில் காவிரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் நீர்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்துப் பயன்படுத்த நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறும், மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
pic courtesy: TNDIPR
மேலும் காண்க:
பள்ளிகள் திறப்பு- பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சரின் பதில்