திமுக தனது தேர்தல் வாக்குறுதிக்களை நிறைவேற்றும் வகையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நூல் விலை உட்பட இதர உப பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் விசைத்தறி மற்றும் கைத்தறி உரிமையாளர்கள் சமீப காலமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். தமிழகத்தின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி தான் பலரின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் வழங்கப்பட்டு வந்தது. சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இலவச மின்சரம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அறிவிப்பு தாமதமாகியது. சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் தற்போது விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு 1000 யூனிட்டாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவை:
திமுக தனது தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்டாக உயர்த்தி, 01.3.2023 முதல் வழங்க உத்திரவிட்டுள்ளார்கள். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூபாய் 8.41 கோடி நிதியை அரசு மானியமாக மின்சாரத்துறைக்கு வழங்கும் என தெரிவித்துள்ளார்.
இதைப்போல், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை, 01.03.2023 முதல், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார்கள். மேலும், 1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு வெறும் 70 பைசா அளவே உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூபாய் 53.62 கோடி நிதியை சேர்த்து மொத்தம் 484.52 கோடி ரூபாயை மின்சாரத்துறைக்கு மானியமாக அரசு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் அறிவிப்பினை தொடர்ந்து விசைத்தறி, கைவினைகள், ஜவுளித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் அரசாணை வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாக நூல் விலை உட்பட இதர உப பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் பாதிப்படைந்த விசைத்தறி நெசவாளர்கள் முதல்வரின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் காண்க :
பூமி இன்னும் சூடாகுமோ? கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் 2022-ல் புதிய உச்சம்
சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டது- ஜி20 மாநாட்டில் மோடி உரை