கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்பாக, பொதுமக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில்முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.
அதில், தமிழகத்தில் இன்னும் கொரோனா முழுமையாக ஒழிக்கப்படவில்லை, முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது, பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது, மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மட்டுமே பல்வேறு தளர்வுகளை வழங்கினோம், ஆகவே, பொதுமக்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை, தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாள் ஒன்றுக்கு 36 ஆயிரம் என்ற அளவை தொட்ட கொரோனா தொற்று இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வருகிறது.
முழு ஊரடங்கு, மருத்துவர்களின் கடைமைக் கூடிய பணி, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, திறமையான நிர்வாகம் ஆகிய காரணமாகவும்தான் இந்த அளவுக்கு நாம் வெற்றியைப் பெற்றுள்ளோம்.கொரோனாவைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்று சொல்லலாம் ஆனால் முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது. தளர்வுகள் இருக்கும்போது, எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று மக்கள் யாரும் கருதக் கூடாது. இன்னமும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத் திறக்கவில்லை,பூங்காக்கள் திறக்கவில்லை,ஏனென்றால் இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், இவையெல்லாம் இன்னும் திறக்கப்படவில்லை என்ற காரணத்தை உணர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உணவகங்கள், கடைகள் மற்ற முக்கிய சேவைகள், பொதுப் போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அனுமதி போன்ற பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி தான் மிகப்பெரிய கேடயமாக உள்ளது, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை, இந்நிலையில், மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு அவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியில் செல்ல வேண்டும், அப்படி வரும்போதும் கோரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!
டீசல் விலை உயர்வு: 3 மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டியது!
புதிய மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ள ஊர்கள்! விரைவில் அறிவிப்பு