நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.7 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல எனவும், ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் நெல் கொள்முதலுக்கான ஆதார விலையுடன், கே.எம்.எஸ். 2023-2024 கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82/-ம், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107/-ம், கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழக அரசின் நிதியிலிருந்து வழங்க சமீபத்தில் ஆணையிட்டார் முதல்வர். இந்நிலையில் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க எம்.பி அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுத்தொடர்பாக எம்.பி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிவரம் பின்வருமாறு-
தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் வழக்கமாகத் தொடங்கும் அக்டோபர் ஒன்றாம் நாளுக்கு பதிலாக செப்டம்பர் ஒன்றாம் நாளே தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அதேநேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை போதுமானதல்ல. ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த அளவு ஆதரவு விலையாக சன்ன ரகத்திற்கு ரூ.2203, சாதாரண ரகத்திற்கு ரூ.2183 என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன் சாதாரண நெல்லுக்கு ரூ82, சன்னரக நெல்லுக்கு ரூ.107 வீதம் ஊக்கத்தொகை சேர்த்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு சாதாரண நெல்லுக்கு ரூ 75, சன்னரக நெல்லுக்கு ரூ.100 வீதம் ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு, நடப்பாண்டில் ரூ. 7 மட்டுமே, அதாவது ஒரு கிலோவுக்கு 7 காசு மட்டுமே உயர்த்தி வழங்கியிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.
இந்தியாவில் நெல்லுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதனால், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. அதன் காரணமாக உலகம் முழுவதும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற, நெல் சாகுபடியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. நெல் கொள்முதல் விலையை அதிகரிப்பதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும். ஆனால், கிலோவுக்கு 7 காசு அளவுக்கு ஊக்கத்தொகையை உயர்த்துவதன் மூலம் நெல் சாகுபடியை எவ்வாறு அதிகரிக்க முடியும்?
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக உழவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.2000 செலவு ஆவதாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்திருக்கிறது. அத்துடன் 50%, அதாவது ரூ.1000 லாபம் சேர்த்து வழங்கினால் கூட, குவிண்டாலுக்கு ரூ.3000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.2203 மட்டுமே அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள 797 ரூபாயை தமிழக அரசு ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். அவ்வளவு தொகை வழங்க வாய்ப்பில்லை என்றால் குறைந்த அளவு குவிண்டாலுக்கு 500 ரூபாயாவது ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
விவசாயிகள் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு- என்ன திட்டம்?
மினிமம் பேலன்ஸ் தலைவலி இனி வேண்டாம்: Savings account-ல் புதிய வசதி