இன்று உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப் பட்டு வருகிறது. இந்தியாவிலும் இது குறித்து பெருமளவில் பேசப்பட்டும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசும், மாநில அரசும், பொது மக்களும் எடுத்து வருகிறார்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
அக்டோபர் 1 ஆம் தேதி தலை நகர் டெல்லியில் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் துறைக்கான அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் மூங்கில் தண்ணீர் பாட்டிகள், பசு சாணத்தில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப்புகள் போன்றவற்றின் விற்பனையை காதி நிறுவனத்தில் தொடங்கி வைத்தார்.
இயற்கையிலான பொருட்களை மக்கள் பயன்படுத்தவும், செயற்கை மற்றும் ரசாயன பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும் காதி நிறுவனம் மூலம் முயற்சிக்க உள்ளதாக கூறினார். மூங்கில் பாட்டில், சோப்பு போன்று இயற்கையின் துணையுடன் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அரசு சந்தை படுத்துதலுக்கு உதவும் என்றார்.
இதே போன்ற 20- ற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழில் முனைவோர், தற்போது முதலீட்டாளர் சந்தையில் நுழைவதற்கு தேசிய பங்கு சந்தையை அணுகி உள்ளனர். இந்நிறுவனங்களின் 10% பங்குகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றார்.
காதி நிறுவனம் தொடர்ந்து இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் என்றார். இதன் மூலம் தொழில் முனைவோர் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு, புதிய தொழில்கள் உருவாகும் என்றார். மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ 10,000 கோடி வருமானத்தை ஈட்ட அரசு இலக்கு நிர்ணியத்து இருப்பதாக கூறினார்.
மூங்கில் பாட்டிலின் கொள்ளளவு 700 மீ.லி முதல் 900 மீ.லி வரை இருக்கும் எனவும், இதன் விலை ரூ 560 ஆகவும், 125 கிராம் சோப்பின் விலை ரூ 125 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி பிளாஸ்டிகிற்கு மாற்றாக விற்பனைக்கு வரவுள்ளது மூங்கில் பாட்டில். ஆரோக்கியமான பாட்டில் நம்மனைவருக்கும் கைக்கெட்டும் தூரத்தில்.
Anitha Jegadeesan
Krishi Jagran