வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரத்தில் விருப்பம் இல்லாதவர்கள், அதை அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதியை துவங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கி வருகிறது. தற்போது, 2.20 கோடி வீட்டு மின் இணைப்புகள் தற்போது உள்ளன. மானியம் காரணமாக, ஆண்டுக்கு 3,300 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, பலரும் சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்ததால், அந்த தொகையை பயன்படுத்தி, ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு, இலவச சமையல் கேஸ் இணைப்பை மத்திய அரசு வழங்குகிறது.
அதேபோல், மின்சார மானியத்தை விட்டுக் கொடுக்கும் வசதியை துவக்க, தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதை தெரிவிக்கும் வகையில், அரசின் நிதி நிலைமையை தெரிவிக்கும் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதித்துறை அமைச்சர் தியாகராஜன், 'அரசின் மானியங்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து, தமிழக மின் வாரியத்தின் கடன், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், 1 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. அப்போதே, வசதியானவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தினர். இதை செயல்படுத்தம் சூழ்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா துவக்கிய திட்டம் என்பதுடன், லோக்சபா, உள்ளாட்சி தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல காரணங்களால், அரசால் செயல்படுத்த முடியவில்லை.
தற்போது, அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக, மின் வாரிய கடன் 1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. எனவே, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்வதற்கு பதிலாக, அந்த சலுகை தேவையில்லை என்று விரும்புவோர், அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதியை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை எப்படி செயல்படுத்துவது என்ற பரிசீலனை நடந்து வருகிறது. வசதியானவர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் தாங்களாகவே முன்வந்து, 100 யூனிட் விட்டு தந்தால், அரசுக்கு செலவு குறையும் என்று மின் வாரிய அதிகாரி கூறினார்.
மேலும் படிக்க: