2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் இந்த நோட்டு செல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
புதிய நோட்டு
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதன்படி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. பின்னர் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பயன்பாடு குறைந்தது
எனினும், அண்மைக்காலமாக 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. ஏடிஎம்களில் கூட 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை. 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அதிகம். இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளே அச்சடிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரான் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வருகிறது.
அச்சிடப்படவில்லை
இந்நிலையில், ஆர்டிஐ மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 2016-17ஆம் ஆண்டில் 3,542.991 மில்லியனாக அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, பின்னர் 2017-18ஆம் ஆண்டில் 111.507 மில்லியயானக் குறைக்கப்பட்டது. 2018-19ஆம் ஆண்டில் 46.690 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 2000 ரூபாய் நோட்டுகளே அச்சிடப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாகத்தான் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டதாக தெரிகிறது. இதனால், அந்த நோட்டுகள் விரைவில் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்களிடையேப் பரவி வருகிறது.
மேலும் படிக்க...