கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் கடும் வீழ்ச்சியடைந்த ரப்பர் விலை சிறிது மீண்டு வந்த நிலையில் மீண்டும் ரப்பர் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் நாட்டின் 80% ரப்பர் பயிரிடும் கேரளாவின் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரப்பர் விவசாயிகளுக்கு உதவ ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது விவசாயிகளை மேலும் வேதனை அடைய செய்துள்ளது. ரப்பர் போன்ற பணப்பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்றபோது, அந்த கோரிக்கையை முற்றிலுமாக அமைச்சர் நிராகரித்துள்ளார். பணப்பயிர்களுக்கு MSP (குறைந்தபட்ச ஆதரவு விலை) நிர்ணயிப்பது ஒன்றிய அரசின் கொள்கை அல்ல என வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் ஒன்றிய அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“எம்எஸ்பியின் கீழ் கருதப்படும் பயிர்கள் பொதுவாக பெரிய விவசாயப் பொருட்களாகும். அவை பரவலாகப் பயிரிடப்பட்டு, அதிக பரப்பளவைக் கொண்டிருக்கின்றன, அவை வெகுஜன நுகர்வுப் பொருட்களாகும். பணப்பயிர்கள், இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உண்மையில், MSP ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது, அது ஏன் அவசியம் என்று அமைச்சருக்குத் தெரியவில்லை விவசாயிகள் சார்பில் கூறப்படுகிறது. ஒரு பொருளின் விலை காலப்போக்கில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ என நிலையானதாக இருந்தால், MSP இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட பயிருக்கு MSP இன் தேவை எப்போது ஏற்படும் என்றால், அந்த பயிரின் விலை பெருமளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும் போது தான்.
இதனால் உற்பத்தியாளர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தும் விலை வீழ்ச்சியிலிருந்து அவர்களே மீட்க உதவுகிறது. சுருக்கமாகச் சொன்னால் MSP இன் தேவைக்கும் பயிர் பரவலாகப் பயிரிடப்படுகிறதா? இல்லையா? என்பது போன்ற கருத்தில் எதுவும் இல்லை; MSP தேவை விலை ஏற்ற, இறக்கங்களின் காரணமாக தான் எழுகிறது. மேலும் பணப்பயிர்கள் பொதுவாக உணவு தானியங்களை விட அதிக விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகப்பட்சமாக 2014 ஆம் ஆண்டில், ஒரு கிலோகிராம் இயற்கை ரப்பரின் விலை 245 ரூபாயில் இருந்து 77 ரூபாயாக, கிட்டத்தட்ட 70% குறைந்துள்ளது. 2021 நவம்பரில் ஒரு கிலோவுக்கு ரூ.200 ஆக இருந்த விலை தற்போது ரூ.120 ஆக கிட்டத்தட்ட 40% குறைந்துள்ளது. இது போன்ற ஏற்ற இறக்கங்களினால் MSP நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து ரோடு போடுறாங்களா? விளக்கம் தந்த மாநகராட்சி ஆணையர்