1. செய்திகள்

புலிகளின் மீது சவாரி செய்யும் ஐயப்பன் சாமி.. எதற்கு இதை சொன்னார் பிரதமர் மோடி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
PM Modi inaugurated the 50th anniversary program of 'Tiger Conservation Programme'

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச புலிகள் கூட்டமைப்பையும் (ஐபிசிஏ) பிரதமர் தொடங்கி வைத்தார்.

”அமிர்த காலத்தில் புலிகளின் பாதுகாப்புஎன்ற புலிகள் காப்பக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டின் 5-வது பருவ அறிக்கைகளை வெளியிட்ட பிரதமர், புலிகளின் எண்ணிக்கையை அறிவித்ததோடு, அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் (5வது பருவ) அறிக்கையையும் வெளியிட்டார். புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நினைவு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவில்  புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, புலிகள் பாதுகாப்புத் திட்டம் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் முக்கிய நிகழ்விற்கு அனைவரும் சாட்சியாக இருப்பதாகவும், இத்திட்டத்தின் வெற்றி இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், முழு உலகிற்கும் பெருமை சேர்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். புலிகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுத்ததோடு,  புலிகள் நன்கு வாழக்கூடிய சுற்றுச்சூழலை இந்தியா வழங்கியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டில், உலகிலுள்ள 75% புலிகள் இந்தியாவில் இருப்பதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவிலுள்ள புலிகள் காப்பகங்கள் 75 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருப்பதோடு, கடந்த பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளில், நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 75 சதவிகிதம் அதிகரித்திருப்பதும் தற்செயலான நிகழ்வு என்றும் பிரதமர் கூறினார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படியென உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களின் மனதில் கேள்வி எழுந்துள்ளதாகக் கூறியப் பிரதமர், அதற்கான பதில் இந்தியாவின் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் மறைந்துள்ளதாகக் கூறினார். "சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் இடையிலான மோதலை இந்தியா நம்பவில்லை, இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய வரலாற்றில் புலிகளின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களில் புலிகளின் ஓவியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். மத்திய இந்தியாவைச் சேர்ந்த பரியா சமூகத்தினர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒர்லி சமூகத்தினர் உள்ளிட்டோர் புலியைத் தெய்வமாக வணங்குவதாகவும், இந்தியாவிலுள்ள பல சமூகங்கள் புலியை நண்பனாகவும், சகோதரனாகவும் கருதுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், துர்க்கை, ஐயப்பன் போன்ற தெய்வங்கள் புலி மீது சவாரி செய்வதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியாவின் தனித்துவமான சாதனைகளைக் குறிப்பிட்ட பிரதமர், "இயற்கையைப் பாதுகாப்பதைக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும் நாடு இந்தியா" என்றார். உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதம் மட்டுமே உள்ள இந்தியா, சர்வதேச பல்லுயிர் பெருக்கத்தில் 8 சதவீதம் பங்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் அதிக புலிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனக் குறிப்பிட்ட பிரதமர், ஏறக்குறைய முப்பதாயிரம் யானைகளைக் கொண்டு, உலகிலேயே அதிக ஆசிய யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும், கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளதெனக் கூறினார். உலகிலேயே ஆசிய சிங்கங்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியா என்றும், 2015-ல் சுமார் 525 ஆக இருந்த அதன் எண்ணிக்கை 2020-ல் 675-ஆக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

குடியரசுத் தலைவருக்காக புலிகளின் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.1.64 கோடி செலவீடு- சர்ச்சையில் சிக்கிய தேசிய பூங்கா

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 60 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். கங்கை போன்ற நதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஒரு காலத்தில் அழியும் நிலையில் இருப்பதாகக் கருதப்பட்ட சில நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்த சாதனைகளுக்கு மக்களின் பங்கேற்பு மற்றும் கலாச்சாரமே காரணமெனவும் அவர் குறிப்பிட்டார்.

2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2021-ம் ஆண்டில் இந்தியாவில் மேலும் 2,200 சதுர கிலோமீட்டர் காடுகள் மற்றும் மரங்கள் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில், சமூக காடுகளின் எண்ணிக்கை 43-ல் இருந்து 100-க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 9-லிருந்து 468-ஆக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் வெற்றி பல பரிமாணங்களைக் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், இது சுற்றுலாப் பயணிகள் வருகையையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அதிகரித்ததோடு,  புலிகள் காப்பகங்களில் மனிதன் - விலங்கு மோதல்களைக் குறைப்பதற்கும் வழிவகுத்தது என பிரதமர் கூறினார். "புலிகளின் இருப்பு பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் சூழலியலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பிரதமர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு குனோ தேசிய பூங்காவில் 4 அழகான சிறுத்தை குட்டிகள் பிறந்ததை அவர் நினைவு கூர்ந்தார். மேலும், 75 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன சிறுத்தை இந்திய நிலத்தில் பிறந்துள்ளது என்றார். பல்லுயிர் பாதுகாப்பில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு சில க்ளிக்கில் ஆன்லைனில் லோன்.. இதெல்லாம் யோசிக்காம வாங்காதீங்க

"வனவிலங்கு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் பிரச்சினை அல்ல, சர்வதேச அளவிலான ஒன்று" எனக் கூறிய பிரதமர், இதில் சர்வதேச கூட்டணியின் அவசியத்தையும் வலியுறுத்தினார். 2019-ம் ஆண்டில், சர்வதேச புலிகள் தினத்தில், ஆசியாவில் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு எதிராக ஒரு கூட்டமைப்புக்கு தாம் அழைப்பு விடுத்த நிலையில், அதன் விரிவாக்கமே இந்த சர்வதேச புலிகள் கூட்டமைப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

"புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் மற்றும் சிவிங்கிப்புலி ஆகிய உலகின் 7 பெரும் புலி இனங்களை பாதுகாப்பதில் சர்வதேச புலிகள் கூட்டமைப்பு கவனம் செலுத்தும்" என்று பிரதமர் விளக்கினார். இதன் மூலம், உறுப்பு நாடுகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சக நாட்டுக்கு விரைவாக உதவவும், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடியும் என்றும் அவர் கூறினார். "நாம் ஒன்றிணைந்து இந்த உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு, அவற்றுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஜி-20 தலைமையில் 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற கருப்பொருளை எடுத்துரைத்த பிரதமர், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கும்போது தான் மனிதகுலத்திற்கு சிறந்த எதிர்காலம் சாத்தியமாகும் எனவும் விளக்கினார். "இந்த பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது, முழு உலகத்திற்கும் உள்ளது" என்றும் பிரதமர் கூறினார். COP - 26 கூட்டத்தில் இந்தியா பெரிய இலக்குகளை நிர்ணயித்ததைக் குறிப்பிட்ட பிரதமர், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அந்த இலக்குகளை அடைய முடியுமென்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மேலும் காண்க:

CRPF தேர்வு- இந்தி தெரியாத இளைஞர்கள் என்ன செய்வார்கள்? முதல்வர் காட்டம்

English Summary: PM Modi inaugurated the 50th anniversary program of 'Tiger Conservation Programme' Published on: 10 April 2023, 10:57 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.