என்.எஸ்.இ முறைகேடு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்துள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையிலன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இருப்பினும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்காததன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை இணை இருப்பிட ஊழல் வழக்கில் (கோ-லொகேஷன் ஊழல்) சிபிஐ ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சித்ரா டெல்லியில் கைது செய்யப்பட்டு பின்னர் சிபிஐ தலைமையகத்தின் லாக்கப்பில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து மூன்று நாட்களாக சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை செய்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தியது. எனினும் இந்த விசாரணைகலில் அவர் சரியான பதில்களை அளிக்கவில்லை என அதிகாரிகள் கூறினர். முன்னதாக சனிக்கிழமையன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவரது முன் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது. டெல்லியைச் சேர்ந்த பங்குத் தரகருக்கு எதிராக 2018 முதல் இணை இருப்பிட ஊழலை விசாரித்து வந்த சிபிஐ, என்எஸ்இயின் அப்போதைய உயர்மட்ட அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் செபி அறிக்கைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சித்ரா ராம்கிருஷ்ணாவின் செயல்களுக்கு வழிகாட்டும் ஒரு மர்மமான யோகியைப் பற்றி குறிப்பிடப்பட்ட செபி அறிக்கையில் வெளிவந்த புதிய உண்மைகளைத் தொடர்ந்து சிபிஐ தனது விசாரணையை விரிவுபடுத்தியது. இந்த விசாரணையின் ஒரு கட்டமாக பிப்ரவரி 25ம் தேதி, சிபிஐ, என்எஸ்இ-ன் முன்னாள் குழும இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனைக் கைது செய்தது. 2013 இல் முன்னாள் சிஇஓ ரவி நரேனுக்குப் பிறகு பொறுப்பேற்ற சித்ரா ராமகிருஷ்ணா, சுப்பிரமணியனை தனது ஆலோசகராக நியமித்தார். பின்னர் அவர் குழு இயக்க அதிகாரியாக (GOO) உயர்த்தப்பட்டார். சுப்ரமணியனின் சர்ச்சைக்குரிய நியமனம் மற்றும் அவரது அடுத்தடுத்த பதவி உயர்வு ஆகியவற்றிலும், முக்கியமான முடிவுகளிலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சித்ரா வழிநடத்தப்பட்டார். அந்த நபர் இமயமலையில் வசிப்பதாக சித்ரா ராமகிருஷ்ணா கூறினார். செபி-ஆணையிடப்பட்ட தணிக்கையின் போது சித்ரா ராமகிருஷ்ணாவின் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் பற்றிய ஆய்வு இந்த தகவல்களைக் காட்டுகிறது.
சித்ரா ராம்கிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், என்எஸ், என்எஸ்இ முன்னாள் எம்டியும் சிஇஓவுமான ரவி நரேன் சுப்ரமணியனுக்கு தலா ரூ.2 கோடியும், தலைமை ஒழுங்குமுறை அதிகாரி மற்றும் இணக்க அதிகாரியாக இருந்த வி ஆர் நரசிம்மனுக்கு ரூ.6 லட்சமும் செபி அபராதமாக விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
செல்ல நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது!
மேகதாது விவகாரம்- கர்நாடகம் செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் அதிரடியாகக் கைது!