உலகமெங்கும் அடுத்தடுத்த அலைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் மற்ற வைரஸ்களை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பில்கேட்ஸ் எச்சரிக்கை (Billgates Warning)
உலகின் பல நாடுகளுக்கும் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து கூறியுள்ளதாவது: எனது நெருக்கமான பல நண்பர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பெருந்தொற்றின் மோசமான கட்டத்திற்குள் நாம் நுழையலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். மற்ற வைரஸ்களை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இது கூடிய விரைவில் பரவிவிடும். ஒமைக்ரான் எந்தவிதமாக நோய்வாய்ப்படுத்தும் எனத் தெரியவில்லை.
வேகமாக பரவும் தன்மை (Fast Spreading)
டெல்டாவை விட 50 சதவீதம் தீவிரமானதாக இருந்தாலும் கூட, இதுவரை நாம் பார்த்ததில் மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ளது. ஏனெனில், இது மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே, முகக்கவசம் அணிவது, பெரிய கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். பூஸ்டர் டோஸை செலுத்தி கொள்வது சிறப்பான பாதுகாப்பை அளிக்கும்.
இதில் நல்ல செய்தி என்னவென்றால், ஒமைக்ரான் மிக விரைவாக கடந்து செல்லும். ஒரு நாட்டில் ஒமைக்ரான் புகுந்துவிட்டால் அங்கு கோவிட் அலை மூன்று மாதத்திற்கும் குறைவாகவே நீடிக்கும். அந்த சில மாதங்கள் மோசமாக இருக்கலாம். ஆனால் நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், தொற்றுநோய் 2022ல் முடிவுக்கு வரும் என நம்புகிறேன். எப்போதாவது தொற்றுநோய் முடிவுக்கு வரும், நாம் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வோம். அந்த நேரம் விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க