மருத்துவச் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை, சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்காக உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்களில் வசதி மையங்களை நிறுவ பரிந்துரைத்தார். பிராண்ட் இந்தியாவை உருவாக்குவது குறித்து மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரிகளுடனான வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய அவர், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் சிகிச்சை பெற விரும்புவோர் வசதிக்காகவும் நம்பகமான தகவல்களை வழங்குவதற்காகவும் 'ஒன் ஸ்டெப்' போர்டல் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
இந்தியா, அதன் உயர்தர சுகாதாரச் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளுடன், உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளது என்று திரு மாண்டவியா குறிப்பிட்டு இருக்கிறார்.
“இன்று, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக, இந்தியாவுக்கு வருகிறார்கள். மருத்துவச் சிகிச்சையை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், பிரதமர் தலைமையில் 'ஹீல் இன் இந்தியா' திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. அதேபோல், 'ஹீல் பை இந்தியா' திட்டத்தையும் துவங்கியுள்ளோம் எனவும், இது நமது மருத்துவப் பணியாளர்களுக்கு உலகம் முழுவதும் பயணம் செய்து ஆரோக்கியமான உலகளாவிய சமுதாயத்திற்குப் பங்களிப்பதற்கான வாய்ப்பை வழங்கும்" எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, "பாரம்பரிய மருத்துவத் துறையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவை உலகளாவிய மருத்துவ மதிப்பு மையமாக மாற்ற உறுதி எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவச் சிகிச்சை சார்ந்த வெளிநாட்டுப் பயணிகள் வருகையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த திரு மாண்டவியா, சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் வர விரும்புவோருக்கு உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்களில் வசதி மையங்களை நிறுவ பரிந்துரைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும். அதோடு, இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களிடமிருந்து கருத்து அல்லது சான்றுகளைப் பெற ஒரு அமைப்பு நிறுவப்படும்.
மருத்துவத் துறையில் மற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்களை உருவாக்குவதை வலியுறுத்தும் போது, திறமையான செவிலியர்களை வழங்க ஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள தகவலையும் தெரிவித்திருக்கிறார். திறமையான மருத்துவ மனிதவளத்திற்காக மற்ற நாடுகளுடனும் இத்தகைய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவச் சிகிச்சை சார்ந்த வருகையை மேம்படுத்த இந்த வகையான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
"கடந்த சில ஆண்டுகளில், மருத்துவ மதிப்புள்ள பயணம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்தியா இப்போது ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ சுற்றுலா மையங்களில் ஒன்றாக உள்ளது" என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய மருத்துவ முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், “ஆயுஷின் மையப் புள்ளியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, 'ஆயுஷ் மார்க்-'யை துவக்குவதாக அறிவித்தார். இது இந்தியாவில் ஆயுஷ் தயாரிப்புகளுக்கு நம்பகத்தன்மையை வழங்கும் மற்றும் பாரம்பரிய மருத்துவத் தொழிலை ஊக்குவிக்கும்".
ஆயுர்வேத சிகிச்சைக்காக பிற நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு சிறப்பு விசா வழங்க வழி வகை உருவாக்கப்பட்டுள்ளது. "ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக 165 நாடுகளுடன் மருத்துவ விசா மற்றும் மருத்துவ உதவியாளர் விசா வழங்கப்பட்டுள்ளது" என்பதையும் குறிப்பிட்டார்.
திரு மாண்டவியா, மருத்துவ சுற்றுலாத் துறையை வலுப்படுத்தவும், இந்தியாவை 'உலகளாவிய மருத்துவ மையமாக' மாற்றவும், 'அதிதி தேவோ பவ' என்ற நுண் உணர்வின் அடிப்படையில் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.
மருத்துவ சுற்றுலா சங்கத்தின் மருத்துவ சுற்றுலா குறியீட்டு 2020-21 இன் படி, இந்தியா தற்போது முதல் 46 நாடுகளில் 10வது இடத்திலும், உலகின் சிறந்த 20 ஆரோக்கிய சுற்றுலா சந்தைகளில் 12வது இடத்திலும், ஆசிய-பசிபிக்கில் உள்ள 10 ஆரோக்கிய சுற்றுலா சந்தைகளில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. அமெரிக்காவில் சிகிச்சை செலவை விட இந்தியாவில் சிகிச்சை செலவு 65 முதல் 90 சதவீதம் குறைவாக உள்ளது என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.
மேலும் படிக்க