அரசு கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்க காலதாமதம் ஏற்படுதால் மழை காரணமாக நெல் மூட்டைகள் வீணாகும் நிலை எற்பட்டுள்ளது.
பம்ப் செட் மூலம் சாகுபடி
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, தேவராயன்பேட்டை மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் ஒரு சில விவசாயிகள் மோட்டார் பம்ப் செட் மூலம் தண்ணீர் பாய்ச்சி கோடை பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ளனர். கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர் அறுவடை செய்யும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் கிடங்காநத்தம் பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
நெல் மூட்டைகள் பாதிப்பு
ஆனால், அங்கு நெல்லை விற்க பத்து நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது, இதனால் ஈரப்பதம் உள்ள நெல் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல் வீணாகும் முன் விரைந்து கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தேவராயன்பேட்டை, பொன்மான்மேய்ந்தநல்லூர், கோடுகிளி, கிடங்காநத்தம், பெருங்கரை உள்பட பல பகுகளில் மின்மோட்டர் உதவியுடன் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
நெல் கொள்முதல் செய்ய தாமதம்
அறுவடை செய்யப்பட்ட நெல்களை விவசாயிகள் விற்பனைக்கு அரசு எடுத்து செல்கின்றனர் அங்கு நெல் மூட்டைகளில் ஈரப்பதம் இருப்பதாக கூறி வாங்க மறுக்கின்றனர். மேலும் நெல் மூட்டைகளை நன்கு காயவைத்து கொடுத்தாலும் பத்து நாட்களுக்கு பிறகுதான் கொள்முதல் செய்கின்றனர்.
அறுவடை செய்யக்கூடிய நெல்லை ரொம்ப நாள் மூட்டையிலோ அல்லது பட்டரையாக குவித்தோ வைத்திருக்க முடியாது அப்படி வைத்திருந்தால் நெல் பழுப்பு நிறமாக மாறி நெல் அவிஞ்சு போய் வீணாகிவிடும், அப்படி போனால் நெல்லை யாரும் வாங்க மாட்டார்கள், அதனால் அறுவடை செய்த நெல்லை ஓரிரு நாட்களில் விற்றுவிட வேண்டும் இல்லாவிட்டால் தங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும்.
மேலும் தற்போது பருவ மழை தொடங்கி விட்டதால் நெல் மழையில் நனைந்து விணாகி முளைப்பு கட்டி விடும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் வேதனை
தற்போது, கிடங்காநத்தம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தற்போது தினசரி 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். அதனால் நெல் கொள்முதல் செய்ய தேவையின்றி 10 நாட்களுக்குமேல் காத்திருக்க வேண்டியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தினசரி குறைந்தது 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
வெட்டுக்கிளிகளை அகற்றும் பணியில் ஹெலிகாப்டர்கள்!
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!
லாக்டவுன் நேரத்தில் குழந்தைகளை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்வது எப்படி?