தமிழ்நாட்டில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2022-23 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
நெல் கொள்முதல் (Paddy procurement)
நடப்பாண்டில் வழக்கத்திற்கு முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதாலும், விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாலும் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரீப் 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதலை செப்டம்பர் 1 முதல் மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிடைக் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, மத்திய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதலை செப்டம்பர் 1 முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. 2022-23 காரீப் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2040 என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060 என்றும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 என கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2115 என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையினை செப்டம்பர் 1 முதல் வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
மேலும் படிக்க
தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒட்டுண்ணிகள் (ம) இரை விழுங்கிகள் வளர்ப்பு பயிற்சி!