உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 23 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2022-23- ஆம் நிதியாண்டில் 893.08 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2018-19- ஆம் நிதியாண்டை விட 22.6 சதவீதம் அதிகமாகும். 2018-19-ஆம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 728.72 மில்லியன் டன்னாக இருந்தது.
நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கு அமைச்சகம் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி விவரம் பின்வருமாறு-
கோல் இந்தியா லிமிடெட் :
2018-19 நிலக்கரி உற்பத்தி- 606.89 மெட்ரிக் டன்
2022-23 நிலக்கரி உற்பத்தி- 703.21 மெட்ரிக் டன்
உற்பத்தி வளர்ச்சி- 15.9 %
SCCL:
2018-19 நிலக்கரி உற்பத்தி- 64.40 மெட்ரிக் டன்
2022-23 நிலக்கரி உற்பத்தி- 67.14 மெட்ரிக் டன்
உற்பத்தி வளர்ச்சி- 4.3 %
கேப்டிவ் மற்றும் பிற சுரங்கங்கள்:
2018-19 நிலக்கரி உற்பத்தி- 57.43 மெட்ரிக் டன்
2022-23 நிலக்கரி உற்பத்தி- 122.72 மெட்ரிக் டன்
உற்பத்தி வளர்ச்சி- 113.7 %
அனைத்து துறைகளின் தேவையையும் பூர்த்தி செய்யவும், அனல் மின்நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்புகளை உறுதி செய்யவும் தன்னிறைவு அடைய, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி அமைச்சகம் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. நிலக்கரி உற்பத்தியின் வளர்ச்சி தேசத்தின் எரிசக்தி பாதுகாப்பிற்கு வழி வகுத்துள்ளது. மேலும் 2023-2024 நிதியாண்டில் ஆண்டு நிலக்கரி உற்பத்தி இலக்கு 1012 மெட்ரிக் டன் ஆகும் என ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தனியார் சுரங்கம்:
2022-23-ஆம் நிதியாண்டின் போது, மொத்தம் 23 நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஒப்பந்தங்களில் அமைச்சகம் கையெழுத்திட்டது. இந்த சுரங்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 44,906 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-வது சுற்று வணிக ஏலத்திற்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023-24 ஆம் நிதியாண்டில் 25 நிலக்கரி சுரங்கங்கள் வணிக சுரங்கத்திற்காக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி அமைச்சகமும், நிலக்கரி நிறுவனங்களும் அனைத்து நுகர்வோருக்கும் தரமான நிலக்கரியை வழங்குவதற்கான நோக்கத்தை அடைய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நிலக்கரித் துறையில் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த (ட்ரோன், ரிமோட் சென்சிங்) திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தி நிறுத்தப்பட்ட/கைவிடப்பட்ட சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க நிலக்கரி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
pic courtesy : coal india/ Pm modi twitter
மேலும் காண்க: