தமிழ்நாட்டில் சிறப்பாகவும் திறமையாகவும் போக்குவரத்துச் சேவையினைப் பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, இதில் பங்காற்றிய ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புற நடைபெறுகின்றன எனக் கூறப்படுகிறது. அதோடு, பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு முதலிய அனைத்து நிறுவனங்களிலும் தற்பொழுது சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க, பொங்கல் திருநாளினை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு முதலியவற்றில் பணிபுரியும், பணியாளர்களில், 2022-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் "சாதனை ஊக்கத்தொகை" வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 129 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க