News

Monday, 19 June 2023 03:53 PM , by: Muthukrishnan Murugan

Private buses collide in Cuddalore - 4 people died

கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கான நிதியுதவி குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இவ்விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பான செய்தியை கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ள முதல்வர், ”இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சி.வி.கணேசன் அவர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் நிவாரண நிதியுதவி விவரம்:

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்களில் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து ஓட்டுனர் ஆறுமுகம், நடத்துனர் முருகன் ஆகியோர் உயிரிழந்த 4 நபர்களில் ஒருவர் ஆவர். இந்த விபத்தினால் கடலூர் பண்ருட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக இன்று காலை வடதமிழக மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்தது. மழைக்கு மத்தியிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்றன. விபத்து தொடர்பான தகவல்கள் தெரியவந்த பின் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட எஸ்பி ராஜாராம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.

மழைக்காலங்களில் அதிவேகத்தில் செல்லாது சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேற்கண்ட விபத்துத் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தங்களது விசாரணையினை வேகப்படுத்தியுள்ளனர்.

மேலும் காண்க:

ராஜீவ் காந்தி கொலை வழக்கு, சஞ்சய் தத் கைது.. நீதிபதியாக சதாசிவம் ஏற்படுத்திய அதிர்வலைகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)