திருச்சி மாவட்டத்திலுள்ள புத்தூர் பகுதியில் 2.14 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம் அமைக்க அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண்மைக்கு என தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2021-2022 ஆம் ஆண்டு முதன் முறையாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் 34,220.65 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அவற்றில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், திருச்சி புத்தூரில், 2.14 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2021 விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும், நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் விதைச்சான்று மையம் அமைப்பதற்கான நிதியை சமீபத்தில் அரசு ஒதுக்கீடு செய்தது. இதனால் மீண்டும் இத்திட்டம் உயிர்ப்பெற்றுள்ளது.
மாநில அரசு சார்பில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டிலேயே கட்டிட பணிகளை நிறைவு செய்து விதைச்சான்று மையத்தினை செயல்பாட்டிற்கு கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விதைப்பரிசோதனை, விதைக்கான உரிமம் மற்றும் சான்றளிப்பு போன்றவற்றை பெற விவசாயிகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருக்காது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மற்றும் தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்த விதைச்சான்று மையத்தின் கீழ் செயல்படும்.
விதை தர மதிப்பீட்டை எளிதாக்குவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. மாநிலத்தின் மத்திய பகுதியில் உள்ள இயற்கை விவசாயிகளுக்கு இந்த மையம் மிகவும் பயனளிக்கும் வகையில் செயல்படும் எனவும், விதைச்சான்று மையத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி அமர்வுகளும் மேற்கொள்ளப்படும் என மூத்த வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்தார்.
விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராஜ் கூறுகையில், மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விதை உரிமம் பெற புதிதாக அமைய உள்ள மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த மையம் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து விதைகளையும் சோதனை செய்ய உதவும்.
விதை மதிப்பீடு மற்றும் சான்றிதழுக்காக ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு செல்லும் அவலநிலையில் உள்ள விவசாயிகள் அரசின் டெண்டர் நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
மேலும் காண்க:
தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய கருத்துக்காட்சியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
காற்று நம்ம பக்கம் வீசுது சார்.. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்