அரசு பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சரும் உடனிருந்தார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” என்பதைத் திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டூர் - பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.
பள்ளிக்கல்வித் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்த திட்டம் அமையும். அதோடு, நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வானவில் மன்றத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். பின்பு, காட்டூர் - பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை மேற்பார்வையிட்டார். அதோடு, அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
இந்த திட்டத்தின் நோக்கங்களாக, குழந்தைகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை இருக்கின்றன.
மேலும், சக ஆசிரியர்களுடனான துறை சார்ந்த உரையாடலுக்கு வாய்ப்பு தருகிறது. அதோடு, பிற ஆசிரியர்கள் அறிவியலையும் கணிதத்தையும் எவ்வாறு கற்றுத் தருகிறார்கள், மாணவர்களின் சந்தேகங்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம். மேலும், கற்பித்தல் முறைகளையும் பிறரிடம் இந்நிகழ்வின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். நவீன தொழிநுட்பங்களையும் கணிதம் சார்ந்த புதிய யுக்திகளையும் அறிந்து கொள்வதுடன், அவற்றை வகுப்புகளில் குழந்தைகளிடத்தில் பகிர்ந்து கொள்ளவும் இந்தக் கலந்துரையாடல் உதவும் எனத் தமிழ்நாடு அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 540 மெட்ரிக் டன் யூரியா உரம் வருகை!!