கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 5 மாதம் கர்ப்பிணி எலி காய்ச்சல்லால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறையினர் பொள்ளாச்சி அருகேயுள்ள பணிக்கம்பட்டியில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிராம பகுதிகளில் கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்பட்டு வரும் நிலையில், எலி காய்ச்சல் ஆடு, மாடு, நாய்கள் மற்றும் எலிகளின் எச்சம், சிறுநீர் மூலம் பரவுகிறது. எனவே ஆடு, மாடு, நாய்களை தொட்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவிய பிறகே சாப்பிட வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீரை கொதிக்க வைத்து, வடிக்கட்டி மூடி வைத்து குடிக்க வேண்டும் என்றும் ஆடு, மாடுகள், நாய்கள் வளர்க்கும் இடங்களை கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
குடி நீரில் குளோரின் கலந்து வருவதால் மருந்து வாசனையாகத்தான் இருக்கும் இதற்காக குடிநீர் வினியோகம் செய்யும் ஊழியர்களிடம் தகராறு செய்ய கூடாது என்றும், குளோரின் கலந்த தண்ணீரை குடித்தால்தான் நோய் பாதிப்பை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் கடந்த 3 நாட்களில் முகாம்கள் நடத்தப்பட்டதால், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர் என்றும், முகாம்களில் சாதாரண காய்ச்சல் மட்டும் கண்டறியப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில், வேறு எந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் இல்லாததால் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும், பொதுமக்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மட்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: