ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகளும், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கோவை இராமநாதபுரம் 80அடி சாலைப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேரில் ஆய்வு செய்த உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆய்வின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19 ஆயிரம் குடும்பங்களுக்கும், ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் , பச்சரிசி, முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும், இதனை முதலமைச்சர் சென்னையில் துவக்கி வைக்க உள்ளார் என்ற தகவலைத் தெரிவித்தார்.
அதோடு, பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசு 9 முதல் 12 ம் தேதி வரை4 தினங்களில் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் என்றும், அப்பொழுது வாங்க முடியாதவர்களுக்கு 13ம் தேதியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார். பொங்கல் தொகுப்பு பொருட்கள் 100% தயாராக இருக்கிறது.
கரும்பு 90 சதவீதம் வந்துள்ளது என தெரிவித்த அவர், கருணாநிதியின் ஆட்சி காலத்தில் புரதச் சத்துமிக்க உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று சிறப்பு பொது விநியோக திட்டம் துவங்கப்பட்டு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மைதா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றது என்று கூறியதோடு, அதில் கடந்த ஆட்சியில் இரண்டு பொருட்களை நிறுத்தி விட்டார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து இருக்கின்றனர். தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்வதோடு, அதற்கேற்ற தீர்வுகள் வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
இந்த் நேரடி ஆய்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் முதலியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க
சமையல் பொருட்களின் விலை அதிரடி உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!