பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் 'பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' என்ற பெயரில் புதிய திட்டத்தினைத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.
"மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளப்படுத்துவதற்காகப் பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாடவேளை வாரம் ஒருமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடவேளைகளைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்பு திறன் மற்றும் படைப்பாற்றலை வளத்துக்கொள்ள தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8, 9-10, 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். எல்லா மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித்
தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம். அதை வைத்து கலந்துரையாடல் செய்யலாம். நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு, மேற்கோள்கள் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்கள் இது போன்ற செயல்களைச் செய்யலாம். இவை பள்ளிகளில் சேகரித்து வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் சிறந்த படைப்புகளைத் தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க ஏற்பாடு செய்யப்படும். அதில் வெல்பவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாவட்ட அளவில் வெல்பவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கவிருக்கும் முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்படும்.
அதோடு, மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வுகளும் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இடையில் நடக்கும் இப்போட்டியில்
வெல்வோர் அறிவுப் பயணம்' என்கிற பெயரில் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்குச் செல்ல வாய்ப்பளிக்கப்படும். இந்தப் பயணத்தில் உலகப் புகழ்பெற்ற நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் போன்றவற்றைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தை, இன்று காலை 9:30 மணிக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் நிகழ்வில் துவக்கி வைத்துள்ளார்.
மேலும் படிக்க