கடலுார் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா பட்டத்தில், 1.2 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெல் (Paddy) பயிரிடப்பட்டுள்ளது. முன்பட்டம், பின்பட்டம் என இரண்டு போகமாக விவசாயிகள் சம்பா சாகுபடி (Samba Cultivation) செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் ஏரி பாசனம் மூலம் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.
மகசூல் பாதியாக குறையும் அபாயம்
சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, பின்பட்ட சம்பா நெற்பயிர்களில் அதிகளவில் ஆணைக்கொம்பன் ஈ தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நடப்பாண்டு சம்பா மகசூல் (Yield) பாதியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பாதுகாப்பு துறை விஞ்ஞானி மருதாச்சலம் (Marudhachalam) கூறுகையில், 'மாவட்டத்தில் 3.12 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்கொம்பன் ஈ பூச்சி கொசு வடிவில் இருக்கும். அதன் அடிவயிறு பளிச்சென சிவப்பாக காணப்படும். முட்டையில் இருந்து வெளிவரும் கால் இல்லாத பூச்சிகள் நெல் பயிர்களின் துார்களை துளைத்து, நடுக் குறுத்தை தாக்குகிறது. இந்த தாக்குதலால் நெல் குறுத்து வெங்காய குழல் அல்லது வெள்ளிக் குறுத்து போல் ஆகிவிடும். இந்த துார்களில் மேற்கொண்டு வளர்ச்சி ஏற்படாது என்பதால் நெல் கதிர்கள் உருவாகாது. நெற் கதிர்களில் 50 சதவீதம் வரை ஆணைக்கொம்பன் ஈ தாக்கி சேதப்படுத்துகிறது. இதனால் மகசூல் பாதியாக குறையும் அபாயம் உள்ளது.
கட்டுப்படுத்தும் முறை:
பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிர்அறுவடை (Harvest) செய்த பின்னர், நிலத்தை உடனடியாக உழவு செய்ய வேண்டும். வயல்களில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்கு பொறிகள் வைத்து, பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஆணைக்கொம்பன் ஈக்கு எதிர்ப்பு திறனுடைய குறுகிய கால ஏ.டி.டீ. 45 (ADP 45), ஏ.டி.டீ. 48 (ADP 48), மத்திய மற்றும் நீண்டகால ரகமான ஏ.டி.டீ. 39 (ADP 39), எம்.டி.யு 3 ஆகியவற்றை நடலாம்.
பிளாஸ்டி கேஸ்டர் ஒரைசே எண்ணும் புழு ஒட்டுண்ணிகளை கொண்ட தூர்களை சேகரித்து வயலில் இட வேண்டும். தழைச்சத்து உரங்களை (Nutrient fertilizers) பரிந்துரைத்த அளவில் மட்டுமே இட வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தால், தயாமீதாக்சம் 25 டபிள்யூ.ஜி (40 கிராம்) பிப்ரோனில் 5 எஸ்.சி., (500 கிராம்), கார்போசல்பான் 25 ஈ.சி., (400 மி.லி.,) ஆகிய ரசாயனகொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
கனமழையில் பயிர்கள் மூழ்குதல், வறட்சியில் பயிர்கள் காய்ந்து விடுதல் என இயற்கையின் தாக்குதலால், விவசாயிகள் கவலைப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், தற்போது பூச்சித் தாக்குதலால் மகசூல் குறைவது வருத்தத்தை அளிக்கிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளே! பாரம்பரிய நெல் இரகங்களை பயிரிடுவோம்! மீட்டெடுப்போம்!