இப்படியுமா பணத்தைப் பதுக்குவாங்க என்று எண்ணும் அளவுக்கு, சில அரசு ஊழியர்கள், ஈவு இரக்கமின்றி, பொதுமக்களிடம் லஞ்சத்தை வாங்கிக் குவிக்கின்றனர். அப்படி வாங்கிக்குவிக்கும் அதிகாரிகள், அனைவருமே லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்குவதில்லை என்பதுதான் வேடிக்கை.
அதிர்ச்சி
கர்நாடகாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், மழைநீர் குழாயில் இருந்து மழை போல் பணம் விழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதிரடி சோதனை
கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை 15 அரசு அதிகாரிகளைக் குறிவைத்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், கர்நாடக மாநில பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவரின் வீடும் அடங்கும்.
குழாயில் பதுக்கிய பணம் (Money stashed in the pipe)
சாந்த கவுடா என்னும் அந்த பொறியாளரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் இருந்து சில லட்சம் பணத்தைக் கைப்பற்றினர். பின்னர், மாடியில் இருந்து இணைக்கப்பட்டிருந்த மழைநீர் குழாயை சோதனையிட்டனர். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சிக் காத்திருந்தது.
குழாயை அறுத்து பார்த்ததில் அதிலிருந்து கட்டுக்கட்டாக பணம் விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலிருந்து ஒருவர் குச்சியால் பணத்தை தள்ளிவிட கீழே மழை போல் விழுந்த பணத்தை ஒரு வாளியின் மூலம் சேகரித்தனர்.
ரூ.13 லட்சம் (Rs.13 lakh)
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., மகேஷ் கூறுகையில், 'சோதனையில் மொத்தம் ரூ.54 லட்சம் பறிமுதல் செய்தோம். அதில், குழாயில் இருந்து மட்டும் ரூ.13 லட்சம் கைப்பற்றப்பட்டது,' என்றார்.
லஞ்ச லாவண்யம்
அரசு ஊழியர்களில், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வேலை செய்யும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமே.
உச்சக்கட்ட அவமானம்
அதேநேரத்தில் லஞ்சம் வாங்குவோர், இப்படி லஞ்ச வழக்கில் சிக்கும்போது, அவர்கள் மட்டுமல்லாமல், குடும்பத்தினருக்கும் மிஞ்சுவது உச்சக்கட்ட அவமானம்தான். அத்தோடு ஓய்வூதியம் வரைக்கும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே இனியாவது லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லது. இல்லையெனில் அவர்கள் குடும்பத்தைக் குழிதோண்டிப் புதைக்கத் துணிகிறார்கள் என்றே அர்த்தம்.
மேலும் படிக்க...
லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!