தமிழகத்தில், பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே இந்த அறிவிப்பை புகைவிட்டு மனதை இலேசாக்கும் ஆண்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் உங்கள் ரூ.2000ம் அபேஸ் ஆகிவிடும்.
இந்தியாவில், குப்பையில் கொட்டப்படும் புகையிலை கழிவுப் பொருட்களை சுத்தப்படுத்த, ஆண்டுக்கு 76.66 கோடி ரூபாயை அரசு செலவிடுவதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம் - 2003 அமலில் இருந்தாலும், அவற்றை அரசு தீவிரப்படுத்தாததால், ஆண்டுக்கு 82.38 லட்சம் கிலோ புகையிலைக் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
40லட்சம் கழிவுகள்
இதுகுறித்து, புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான அமைப்பின் நிர்வாகி சிரில் அலெக்சாண்டர் கூறியதாவது:
தமிழகத்தில், சிகரெட் புகையிலை கழிவுகள் 40.40 லட்சம் கிலோவாக இருக்கிறது. பீடி கழிவுகள் 6.07 லட்சம் கிலோ உள்ளிட்ட புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் மொத்தமாக, 82.38 லட்சம் கிலோ கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. அதன்படி, மொத்த குப்பை சுத்தம் செய்வதில், 10 சதவீத தொகையை, புகையிலை பொருட்களை சுத்தம் செய்ய அரசு செலவிடுகிறது.
அதனால் ஏற்படும் மாசை சுத்தப்படுத்துவதற்கான கட்டணத்தை, பயன்படுத்துவோரிடம் இருந்து வசூலிக்க வேண்டியது அவசியம்.
ரூ.2000 அபராதம்
அதன்படி, பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, 200 ரூபாயில் இருந்து, 2,000 ஆக உயர்த்துவதற்கான சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.
விரைவில் அமல்
தமிழகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் உட்பட, 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பின்பற்றி யாரும் செயலாற்றாததால், பஸ் நிலையங்கள், டீக் கடைகள், வாகனம் ஓட்டும்போது என, பொது இடங்களில் சிகரெட், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
நோய்கள்
இவர்கள் வாயிலாக, புகையிலையை பயன்படுத்தாதோருக்கு சுவாச பிரச்னை, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் படிக்க...