மாநிலத்தில் ஒரு புதுமையான முயற்சியாக, கரூர் மாவட்டத்தின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 21 நியாய விலைக் கடைகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் (SHGs) தயாரித்த சானிட்டரி நாப்கின்களின் விற்பனையை மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மேட்டு மகாதானபுரத்தில் உள்ள ரேஷன் கடையில், 'தோழி' சானிடரி நாப்கின்கள், சந்தையில் கிடைப்பதை விட, 25 சதவீதம் விலை குறைவு என, அதன் விற்பனையினை தொடங்கி வைத்த கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.பிரபுசங்கர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பல்வேறு பொருட்களை தயாரித்து மதி அங்காடி திட்டத்தின் கீழ் விற்பனையும் செய்து வருகின்றனர். தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து வருகிறது. அந்த வகையில் 'தோழி' என்கிற பெயரில் சானிட்டரி நாப்கின் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலத்திலேயே முதல் முறையாக அதனை நியாயவிலை கடைகள் மூலம் விற்பனை செய்யும் முறையினை கரூர் மாவட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு பாக்கெட் 30 ரூபாய் என நிர்ணயம்:
“மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதை அதிகரிப்பதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகள் தொலைதூர இடங்களில் கூட அமைந்துள்ளன, எனவே அவற்றை விற்பனை நிலையங்களாகப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்து பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்தலாம். மேலும், இது மாதவிடாயைச் சுற்றியுள்ள சமூகத் தடைகளை உடைக்க உதவும் என்று அவர் மேலும் கூறினார். ஆறு ‘தோழி’ சானிட்டரி நாப்கின்கள் கொண்ட ஒரு பேக் 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்களிடம் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் தயாரிப்பு மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். அவர்களிடம் ஒரு படிவம் வழங்கி அதன் மூலம் தயாரிப்பு குறித்த கருத்துகள் கோரப்படும். இந்த முயற்சி வரும் நாட்களில் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
"மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான இயந்திரங்களை வாங்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார். தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சானிட்டரி நாப்கினை கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் கிராமத்தை சேர்ந்த அக்ஷயா மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
விற்பனை தொடக்க விழாவில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் காந்தராசா, துணை ஆட்சியர் சைபுதீன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், பிடிஓ சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
pic courtesy: karur collectoe page
மேலும் காண்க: