கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வறண்ட நிலங்களுக்கான மாதிரி பழப் பயிர்களுக்கான தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி, அசோக மரக்கன்று நட்டுத் துவக்கிவைத்தார். இந்தத் தோட்டத்தில், அத்தி, நெல்லி, நாவல், இலந்தை, சப்போட்டா, லசோடா, சிரொன்ஜி போன்ற பதினேழு வகையான மரங்கள், ஒரு ஹெக்டேர் பரப்பளவில் மாணவர்களும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடவு செய்யப்பட்டுள்ளன.
வைட்டமின் C
குறிப்பாக வைட்டமின் C சத்து நிறைந்த மேற்கிந்திய செர்ரி, நெல்லி போன்ற மர வகைகளும் நடப்பட்டன. இப்பழவகை மரங்கள் உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் கொண்டது மட்டுமல்லாமல், வறண்ட மற்றும் மண்வளம் குன்றிய நிலப்பகுதிகளிலும் பயிரிட மிகவும் ஏற்றதாகும்.
பழக்கண்காட்சி
மேலும் இப்பழ மரங்கள் குறித்த கண்காட்சிக்கும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில், இப்பழ மரங்களில் இருந்து தயாரிக்கப்படும், மதிப்புக் கூட்டுப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து பழமைவாய்ந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்புப் பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார், பதிவாளர் முனைவர் அ.சு.கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க...
தைராய்டு பிரச்னை வராமல் தடுக்கும் செம்பு பாத்திரம்! 10 மருத்துவப் பயன்களின் பட்டியல் இதோ !