அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தக்கல் செய்ய முடியாது எனக்குறிப்பிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடியும் செய்தது உச்சநீதிமன்றம்.
கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தமிழ்நாட்டின் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டிலும், தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்திலும் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 17 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனை நடத்தி அதிகாலை 2 மணியளவில் அமைச்சரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதினை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சையும் நடைப்பெற்றது. உடல் நலம் தேறிய பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமலாக்கத் துறை கைது தொடர்பாகவும், அவரை விடுவிக்கக் கோரியும் அவருடைய மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரணைக்கு சென்றது. அங்கு இரு அமர்வு நீதிபதிகளில் ஒருவரான டி.பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததுடன் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன் வைத்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி கைதுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை எனவும் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு திமுகவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் செந்தில்பாலாஜி தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சிஆர்பிசி பிரிவு 167-ன் கீழ் "கஸ்டடி" என்ற வார்த்தையில் இதுபோன்ற பிற காவலையும் உள்ளடக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் காண்க:
பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை- காவிரி விவகாரத்தில் கடுப்பான துரைமுருகன்
சுதந்திரத் தினத்தன்று சென்னையில் குவியும் விவசாயிகள்- எதற்காக?