1. செய்திகள்

பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை- காவிரி விவகாரத்தில் கடுப்பான துரைமுருகன்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Tamilnadu Minister Durai Murugan statement on the Cauvery issue

காவிரி பிரச்சினையினை  மாநில அரசுகள் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் காவிரியின் வரலாறு தெரியாமல் பேசுவது ஏற்புடையது அல்ல என தெளிவுப்படுத்தியுள்ளார்.

காவிரி நீர் திறப்பில் கர்நாடக அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி பிரச்சினை தொடர்பான ஒன்றிய இணை அமைச்சரின் கருத்துக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

கடந்த இரண்டு மாத காலமாக கர்நாடகம் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீரை வழங்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கும், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் அவர்களை நான் இரண்டு முறை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி இருக்கிறேன்.

காவிரியிலிருந்து தண்ணீரை திறந்துவிடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்குதான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனாலும், முழுமையாக காவிரி மேலாண்மை இதுவரை செயல்படவில்லை. நீர் சராசரியாக கிடைக்கும் வருடங்களில் கர்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வதை pro Rata Basis என்று குறிப்பிடுவார்கள். அந்த பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை. இந்த வாரியம் மத்திய அரசின் கீழ் இயங்குகிறது.

எனவே தான் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த பணியை வாரியம் செய்ய வேண்டும் என்று தான் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகமோ அல்லது ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் என்பவர், "கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன் பிரச்சினையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது" என்று தெரிவித்திருக்கிறார்.

ஒன்றிய இணை அமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் அர்களுக்கு காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 1967 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்சினை குறித்து பேசி பேசி எந்த முடிவிற்கும் வர முடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு போய், உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்ட பிறகு இரு மாநிலங்களுக்கிடையே பேச்சு வார்த்தை என்பதற்கே இடமில்லை.

பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்திருந்தால் நடுவர் மன்றம் அமைந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இவையெல்லாம் நீண்ட காலமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற வரலாறு.

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலைநாட்டுவதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். அந்த நிலைப்பாடு தான் தமிழகத்தின் நிலைப்பாடு.

இந்த விவரமெல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் அறிவுரை சொல்வது போல் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என தனது அறிக்கையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

ஆஸ்கர் தம்பதியை நம்ப வைத்து ஏமாற்றினாரா இயக்குனர்? அதிர்ச்சி தகவல்

காரைக்கால் பருத்தி விவசாயிகளை கலங்க வைத்த மாவு பூச்சிகள்

English Summary: Tamilnadu Minister Durai Murugan statement on the Cauvery issue Published on: 07 August 2023, 08:28 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.